வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (12/07/2018)

கடைசி தொடர்பு:16:25 (12/07/2018)

`மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது'- நிர்மலா தேவி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி

ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வழக்கின் முக்கியத்துவம் கருதி விரைவு நீதிமன்றத்தில் விசாரணைசெய்து 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக ஆசைவார்த்தைகள் கூறிப் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா மற்றும் உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில், மூன்றாவது குற்றவாளி ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு,  நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், நிர்மலா தேவியுடன் கருப்பசாமி குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்களைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருந்தார்.

நிர்மலாதேவி

இதன்படி நேற்று, சி.பி.சி.ஐ.டி போலீஸார் அறிக்கை தாக்கல்செய்தனர். அதில், கருப்பசாமி - நிர்மலா தேவி இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டதற்கான ஆதாரங்களைத் தாக்கல்செய்திருந்தனர். மேலும், விசாரனை இறுதிக்கட்டத்தில் உள்ளதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பதிவுசெய்த நீதிபதி சுவாமிநாதன், ஜாமீன் வழங்குவது குறித்த தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

 இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நிர்மலாதேவி , கருப்பசாமி, முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினால், மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி-க்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி, இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 24 முதல் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், வழக்கின் முக்கியத்துவம் கருதி விரைவு நீதிமன்றத்தில் விசாரணைசெய்து, 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.