வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (12/07/2018)

கடைசி தொடர்பு:17:45 (12/07/2018)

மீனவர்களுக்கு எதிரான சட்டம்! இந்தியாவின் மனுவை தள்ளுபடி செய்தது இலங்கை நீதிமன்றம்

``இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்மீது புதிய சட்டத்தின்கீழ் வழக்கு பதிவிட வேண்டாம்'' என இந்தியா  தாக்கல் செய்த மனுவை இலங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகள்
 

இலங்கைக் கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு ரூ.60 லட்சம் முதல் 17 கோடி வரை (இலங்கை மதிப்பில்) அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக மீனவர்களுக்கு இந்தச் சட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதை அமுல்படுத்த இந்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இந்திய அரசு இந்தப் புதிய சட்டம் குறித்து மெளனமாக இருந்ததால் இலங்கை அரசு இதை நிறைவேற்றிவிட்டது.

இந்நிலையில், கடந்த 5 மற்றும் 8-ம் தேதிகளில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். விசாரணைக்கு பின் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஊர்க்காவல் துறை நீதிபதி வழக்கை நாளை விசாரிப்பதாகக் கூறி ஒத்தி வைத்தார். இதனிடையே சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மீது இலங்கை அரசு புதிதாக அமல் படுத்தியுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தைப் பிரயோகிக்கக் கூடாது என இந்திய தூதரக அதிகாரிகள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்தப் புதிய சட்டம் இலங்கை மீன் பிடி அமைச்சகத்தின் கீழ் வருவதால் இந்திய தூதரக அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் நாளை விசாரணைக்கு வர உள்ள இந்த வழக்கில் தமிழக மீனவர்கள் மீது புதிய சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும் நிலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் விதிக்கும் அபராதத் தொகையைக் கட்ட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பாக் நீரிணை பகுதியை நம்பியுள்ள தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது