கலெக்டர் அலுவலகத்திலேயே நிற்காமல் செல்லும் அரசுப் பேருந்துகள்! - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கவும் அரசு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதென்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. மாவட்ட அளவிலான அனைத்துத் துறைகளின் அலுவலகங்களும் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக வளாகத்தில்தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்ல பேருந்து வசதிகள் இல்லையென்பதால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தஞ்சை ஆட்சியர் அலுவலக

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது, தஞ்சை நகரத்தில் உள்ள நீதிமன்ற சாலையில் செயல்பட்டு வந்தது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்திருந்ததால் பொதுமக்கள் மிகவும் எளிதாக வந்து செல்ல அது வசதியாக இருந்தது. குறிப்பாக, சுற்றுப்புற கிராம மக்கள் எளிதாக வந்து சென்றார்கள். நீதிமன்ற சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததாலும் மரங்கள் நிறைந்து காணப்பட்டதாலும் பொதுமக்களுக்கு பல வகைகளிலும் ஏற்ற இட அமைப்பாகவே இருந்தது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப்போது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பல கிலோமீட்டர் தொலைவில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டால் அங்கு சென்று வருவது சிரமம் எனக் கூறி, பல தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பழைய கலெக்டர் அலுவலகக் கட்டடம் நல்ல நிலையில் இருக்கும்போது ஏன் நீண்ட தூரத்தில் புதிய அலுவலகம் எனவும் அப்போது கேள்விகள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து புதிய அலுவலகம் செயல்படத் தொடங்கியது. ஆனால், இதற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்படவில்லை. அந்த வழியாகச் செல்லும் பேருந்துகளும் ஆட்சியர் அலுவலகத்தில் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``தஞ்சாவூர்லயிருந்து திருச்சிக்கு தினமும் ஏகப்பட்ட பேருந்துகள் செல்கின்றன. ஆனால், அது எதுவுமே கலெக்டர் ஆபீஸ் ஸ்டாப்ல நிறுத்துறதில்லை. இதுக்குனு பிரத்யேகமான பேருந்துகளும் கிடையாது. கலெக்டர் ஆபீஸ் ஊழியர்களுக்காக மட்டும் தஞ்சாவூர் நகரத்துல இருந்து காலை 9.10 மற்றும் 9.40-க்கு என இரண்டே பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இது பொதுமக்களுக்குத் தெரியாதுங்கிறது ஒருபுறமிருக்க, தினமும் காலையிலயிருந்து சாயந்தரம் வரைக்கும் நாள் முழுக்க நூற்றுக்கணக்கான மக்கள் கலெக்டர் ஆபீஸுக்கு வந்து போக வேண்டிய சூழல்ல இருக்காங்க. எல்லார்கிட்டயும் கார்களோ டூவிலர்களோ கிடையாது. 

குறிப்பா கிராமப்புறங்கள்ல இருந்து வரக்கூடிய ஏழை எளிய மக்கள் பேருந்துலதான் வந்தாகணும். புதிய பேருந்து நிலையத்துலயிருந்து கலெக்டர் ஆபீஸ் போக பேருந்துகள் கிடையாது. மக்கள் தவிக்குறாங்க. திருச்சி போகிற பேருந்துகள், கலெக்டர் ஆபீஸ்ல ஒரு நிமிஷம் நின்னு போகுறதுனால பெருசா எதையும் இழந்துடப் போறதில்லை. கலெக்டர் ஆபீஸ் போறதுக்கே போக்குவரத்து வசதி இல்லைங்கறது மிகப் பெரிய அவமானம். இந்த வெட்கக்கேடு, தமிழ்நாட்டுல வேறு எந்த மாவட்டத்துலயுமே கிடையாது. பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்துலயிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு எல்லா நேரங்கள்லயும் பேருந்துகள் இயக்கப்படணும். தஞ்சை - திருச்சி பேருந்துகள் எல்லாமே இங்க நின்னுதான் போகணும்னு உத்தரவு போடணும். கலெக்டர் ஆபீஸ் - பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள்ல டைம் கீப்பர்களைப் பணி அமர்த்தி இதை தீவிரமா நடைமுறைப்படுத்தணும். மாவட்ட கலெக்டர்தான், மாவட்ட போக்குவரத்து ஆணையராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!