மகனைக் கொன்றவனுக்கு மட்டுமல்ல...கணவனுக்கும் குறி- துப்பாக்கி வாங்கிய மஞ்சுளா பகீர் வாக்குமூலம்! 

மஞ்சுளா

சென்னை, சைதாப்பேட்டை போலீஸாரிடம் துப்பாக்கி வழக்கில் சிக்கிய மின்வாரிய ஊழியர் மஞ்சுளா, அவரின் நண்பர்கள் பிரசாந்த், சுரேஷ் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் மனைவி மஞ்சுளா. இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். இவர்களின் மகன் ரித்தேஸ் சாயை கடந்த பிப்ரவரி மாதம் நாகராஜ் என்பவர் கொலைசெய்துவிட்டார். நாகராஜுக்கும் மஞ்சுளாவுக்கும் நட்பு இருந்துவந்தது. இதுவே கொலைக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், மகனைக் கொன்ற நாகராஜை கொலைசெய்ய மஞ்சுளா திட்டமிட்டார். இதற்காகத் தன்னுடைய நண்பர்கள் பிரசாந்த் மற்றும் சுரேஷிடம் துப்பாக்கி வாங்கித்தரும்படி கேட்டு, 2,00,000 ரூபாய் கொடுத்தார். அதன்படி இருவரும் பொம்மைத் துப்பாக்கியை வாங்கி மஞ்சுளாவிடம் கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், சைதாப்பேட்டை  உதவி கமிஷனர் ஆனந்தராமன் தலைமையிலான போலீஸாரிடம் மஞ்சுளா, பிரசாந்த், சுரேஷ் ஆகிய மூன்று பேரும் சிக்கியுள்ளனர்.  இவர்கள் மூன்று பேரிடமும் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 போலீஸார் கூறுகையில், ``பிரசாந்த் கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். சுரேஷ், தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். பிரசாந்த்துடன் மஞ்சுளாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நாகராஜ் குறித்தும் கார்த்திகேயன் குறித்தும் பிரசாந்த், சுரேஷிடம் முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதோடு, நாகராஜ் என்பவரால் தன்னுடைய உயிருக்கு நிச்சயம் ஆபத்து என்று கூறியுள்ளார். மேலும், கணவருக்கும் தனக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மஞ்சுளாவுடன் கைதானவர்கள்

இதனால், இருவரையும் கொலைசெய்ய துப்பாக்கி தேவைப்பட்டுள்ளது. இதற்கு, பிரசாந்த், சுரேஷின் உதவியை நாடியுள்ளார் மஞ்சுளா. துப்பாக்கி வாங்கித்தருவதாகக் கூறி பணத்தை வாங்கிய பிரசாந்த்தும் சுரேஷும், மஞ்சுளாவுக்கு பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். முதலில் பணத்தை ஏமாற்றிவிட்டாகத்தான் மஞ்சுளா எங்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்தபோதுதான் முழுத் தகவலும் கிடைத்தது. இதனால்தான் அவர்கள் மூன்று பேரையும் கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``மகன் கொலை வழக்கில் முதலில் மஞ்சுளா மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், நாகராஜை மட்டும் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். அதன்பிறகு, மஞ்சுளா குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மஞ்சுளா பெயரில் ஏராளமான சொத்துக்கள் இருந்துள்ளன. அதுதொடர்பாக கார்த்திகேயனுக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மஞ்சுளா வந்துள்ளார். அங்கிருந்தபடியே நாகராஜனுக்கும் கார்த்திகேயனுக்கும் குறிவைத்துள்ளார். ஆனால், மஞ்சுளாவின் நண்பர்கள் ஏமாற்றியதால், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. மேலும், பண விவகாரத்தை விசாரித்தபோதுதான் கொலைத் திட்டம் எங்களுக்குத் தெரியவந்தது" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!