முதலில் ஆய்வு; அடுத்து அதிரடி - போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை செய்த 3 பேர் கைது!

நெல்லை மாநகரப் பகுதிகளில் போலியாகத் தயாரிக்கப்பட்ட பிரபல செல்போன் நிறுவனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்த 3 பேரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

போலி உதிர்ப்பாகங்கள் விற்பனை

நெல்லை மாநகரப் பகுதிகளில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பிரபல செல்போன் நிறுவனங்களின் உதிரிபாகங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாகப் புகார் வந்தன. இது தொடர்பாக, சென்னையில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரியாகப் பணியாற்றும் சகாயம் என்பவர் நெல்லைக்கு வந்து சில கடைகளுக்குச் சென்று செல்போனுக்கான பாகங்கள் வாங்குவதுபோல ரகசியமாக ஆய்வு செய்தார். அப்போது மிகக் குறைந்த விலைக்கு தரமற்ற போலியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. 

இது குறித்து நெல்லையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜாசுலோச்சனா தலைமையிலான போலீஸார் நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையம் அருகில் உள்ள 5 கடைகளில் பிரபல நிறுவனங்களின் செல்போன் போலி உதிரிபாகங்கள் விற்கப்படுவது தெரியவந்தது. 

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்சிங், பினோராம், அம்பாலால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!