`ஊழல்வாதிகள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்' - அமித் ஷாவுக்கு செல்லூர் ராஜு பதிலடி

செல்லூர் ராஜூ

ஊழல் மிகுந்த மாநிலம் என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, 'யார் ஊழல்வாதிகள் என்று மக்களுக்குத் தெரியும். அவர்கள்தான் எது சரி, எது தவறு என முடிவு செய்ய வேண்டும்'  என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை மாவட்டம் மேற்குத் தொகுதியில் அமைந்துள்ள துவரிமான் கண்மாய் தூர் வாரும் பணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கிவைத்தார். இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியன், மதுரையின் முன்னாள் மேயர் திரவியம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ``தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்துப் பணியின் கீழாக இந்த கண்மாய்ப் பணி  நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 328.95 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஏழு பேர் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்தப் பணிகள் அனைத்தையும், தமிழகம் முழுவதும் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். மேட்டூர் அணை தூர் வாரப்பட்டு, தற்போது மிகச்சிறப்பான முறையில் தண்ணீர் தேக்கப்பட்டுவருகிறது. அதேபோன்று, வைகை அணையும் உரிய நேரத்தில் தூர் வாரப்படுவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படும்.  மதுரை துவரிமான் கண்மாய் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தூர்வாரப்பட உள்ளது. துவரிமான் கண்மாய்க்குத் தண்ணீர் வரக்கூடிய ஓடையின் நீளம் மட்டும் 3 ஆயிரத்து 121 மீட்டர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடிப்படையில் விவசாயக் குடும்பம் என்பதால், தமிழக விவசாயிகள்மீது கூடுதல் அக்கறையுடன் இதை செயல்படுத்திவருகிறார்' என்றார். 

இதற்கிடையே, `தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலம்' என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, `யார் ஊழல்வாதிகள் என்று மக்களுக்குத் தெரியும். மக்கள்தான் எஜமானர்கள், நீதிபதிகள். ஆகையால் தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களே இதைத் தீர்மானிப்பார்கள்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!