`தனித்துவம் மிக்க அருங்காட்சியகமாக வாரணவாசி உருவாக்கம்' - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

வாரணவாசி அருங்காட்சியகத்தை உலகத்திலேயே தனித்துவம் மிக்க அருங்காட்சியமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக, தமிழ்ப் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பாண்டியராஜன்

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகில், தமிழக அரசின் சார்பில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு, அதற்காக 2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.  அவற்றை மாநில தமிழ்ப் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பாசில்கள் மற்றும் தொல்லுயிரிகளைப் பற்றி கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ``அம்மாவின் கனவுத் திட்டமான இந்த அருங்காட்சியகம், உலகத்திலேயே தனித்துவம் மிக்க அருங்காட்சியமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக 43 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட அரிய பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும். 

குறிப்பாக, உலகில் முதல் மனிதன் வாழ்ந்தது தமிழகத்தில்தான் என்ற தடயம், திருவள்ளூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ள பழங்குடியினரின் குகைச் சிற்பங்கள் உள்ளிட்ட அரிய பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும். உலகில் பாசில் மியூசியம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் மட்டுமே. குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள பாசில் மியூசியத்தைவிட சிறந்த மியூசியமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இங்கு, அனைத்து வயதினரும் வந்து பார்த்துச்செல்லும் வகையில் வசதிகள் செய்துதரப்படும். மூன்று கட்டங்களாகப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதல் கட்டபணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. 

இப்பணிகள் முடிவடைந்தவுடன், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அருங்காட்சியகம் திறக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் வரலாற்று மியூசியம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆறு வகையான வரலாற்று ஆய்வகமும் இருக்கும் வகையில் அமைக்கப்படும். செம்பியன் மாதேவி பேரரசி வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியன்குடியில், மாதேவிக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது  மூன்று இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவருகிறது. ராஜேந்திர சோழன் மாளிகை இருந்ததாகக் கண்டறிப்பட்டுள்ள மாளிகை மேட்டின் ஆதாரங்கள் கிடைத்தால், மீண்டும் அந்த இடத்தில் அகழ்வராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!