மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 100 அடி உயரத்தில் பறக்கும் தேசியக் கொடி!

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 100 அடி உயரத்தில் பிரமாண்டமான தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. இந்தக் கொடியை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்றி வைத்தார். 

பல்கலைக்கழகம் தேசியக்கொடி

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றும் விழா மற்றும் பல்கலைக்கழக சுற்றுச் சுவர் திறப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

பின்னர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட சுமார் 3.50 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், ``மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. தேசிய அளவில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 

வரும் 2020-ம் ஆண்டில் இந்திய அளவில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை 30 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், தற்போதே தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் அளவு 46.9 சதவிகிதமாக இருக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் பயில 1,04,453 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தமுள்ள 1,78,139 இடங்களில் 1,04,453 இடங்கள் மட்டும் நிரம்பும் நிலையில் 75,000 காலியாக இருக்கும்.

பல்கலைக்கழக விழா

பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெறுவதாகக் கூறுவது தவறான தகவல். பேராசிரியர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது. அதில் அவர்கள் பல்கலைக்கழக முன்னேற்றத்துக்கு உதவ வேண்டுமே தவிர தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது. தேசிய தர நிர்ணய ஆணையம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் 18-ம் தேதி முதல் 4 நாள்கள் ஆய்வு மேற்கொள்கிறது. அதில், ஏ++ கிரேடு கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1,585 புதிய பாடப்பிரிவுகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவக் கலந்தாய்வு காலதாமதத்தால் பொறியியல் கல்லூரிகள் திறப்பது காலதாமதமாக வாய்ப்புள்ளது’’  என்றார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, கடம்பூர் ராஜு, நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!