வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (12/07/2018)

கடைசி தொடர்பு:21:54 (12/07/2018)

ஒரு மாணவர்கூட இல்லாத அரசுப் பள்ளிக்கு உயிரூட்டிய ஆசிரியர்!

Teacher

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, தகட்டூர் ஊராட்சி ராமகோவிந்தன்காட்டில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, ஒரு மாணவர்கூட இல்லாத நிலையில், தமிழக அரசு இப்பள்ளியை மூட உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர் சுப்ரமணியனின் பெருமுயற்சியால் பள்ளி மீண்டும் இயங்கியது. அவருக்கு 'கனவு ஆசிரியர்' பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் சுப்ரமணியன்

1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், 2014-ம் ஆண்டில் ஒரு மாணவர்கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், இப்பள்ளியை மூட அரசு உத்தரவிட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் பள்ளி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்நேரத்தில் பள்ளிக்கு ஆசிரியர் சுப்ரமணியன் பணிபுரிய வந்தார். ஒரு மாணவர்கூட இல்லாத அப்பள்ளியில் தனது மகனையே முதல் மாணவனாகச் சேர்த்தார். அத்துடன், வீடு வீடாகச் சென்று மாணவர்களைச் சேர்க்க இரவு, பகல் பாராது உழைத்தார்.  

அப்படிச் சேரும் மாணவர்களைத் தனது சொந்தச் செலவில் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துவந்தார். இவரது அயராத உழைப்பால் தற்போது 27 மாணவர்கள் இப்பள்ளியில் படித்துவருகின்றனர். இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு இயங்கிவரும் இப்பள்ளி, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பாடத்திட்டத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. ஆசிரியர் சுப்ரமணியத்தின் பணியைப் பாராட்டி, தமிழக அரசு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவரை வட்டாரக் கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொது மக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.