`காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம்' - நீதிபதி கிருபாகரன் கருத்து

காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

காவலர்களின் ஆடர்லி முறையை ஒழிப்பது மற்றும் பணிச்சுமையைக் குறைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்துவருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவலர்களுக்கு கட்டாயம் வார விடுப்பு வழங்க வேண்டும் என்றும், இதில் அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பியவர் இதுகுறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார். காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்குவதுகுறித்து சட்டத்தில் (Police Standing Order) விதி உள்ளது. அதன்படி வாரவிடுப்பு வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார். வாரவிடுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுவதால், அது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை என்ற கருத்தைத் தலைமை வழக்கறிஞர் முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், ``வாரவிடுப்பு என்பது ஆவணங்களிலே உள்ளது. அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. பெரும்பாலும் காவலர்கள் வாரவிடுப்பு நாள்களிலும் பணிக்கு அழைக்கப்படுகின்றனர்" என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், காவலர் (Police Standing Order) விதியில் வாரவிடுப்பு நாள்களில் பணிக்கு வந்தால் 200 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை நிறுத்த முடியுமா என்றார். ஒரு மாதத்துக்கு 4 வாரவிடுப்பு உள்ளது. ஒரு நாளுக்கு 200 ரூபாய் என்றால் மாதத்துக்கு ரூ.800 கிடைக்கும். அதனால் பெரும்பாலும் பணிக்கு வரவே விரும்புவர். எனவே, அதை நிறுத்திவிட்டு கட்டாய வாரவிடுப்பு வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அதேபோல, காவலர் பணி சமூகத்தில் முக்கியமானது. அவர்கள் இல்லையென்றால் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்ற நிலை ஆகிவிடும் என்றார். அதுபோன்ற நிலை ஏற்பட்டால், அது ஆபத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதி எச்சரித்தார். மேலும், வாகனங்களில் கட்சிக்கொடி கட்டியபடி செல்பவர்களைக் கண்காணிக்க முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வழக்கை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!