பயனற்ற கட்டடங்களைப் புனரமைக்க நடவடிக்கை! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் | Rehabilitation of the worthless buildings says TN Minister Vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (12/07/2018)

கடைசி தொடர்பு:22:20 (12/07/2018)

பயனற்ற கட்டடங்களைப் புனரமைக்க நடவடிக்கை! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர் ஒன்றியப்பகுதிகளில் உள்ள பயனற்ற கட்டடங்களைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்ற நிலையில் இருக்கும் கட்டடங்களைப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். சோமூர் மற்றும் அச்சமாபுரம் சமுதாயக்கூடத்தில், பழுதடைந்திருக்கும் கட்டடங்களைப் பார்வையிட்டனர். மிகவும் பழுதான பகுதிகளை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டவும், கழிவறைகள் அமைக்கவும், உள்பகுதி தரையில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலான சமுதாயக்கூடமாக மாற்ற, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
 

சோமுரில் ஆய்வு மேற்கொள்ளும்போது பள்ளி மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து, நெரூர் தென்பாகம் அரங்கநாதன்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் பயன்பாடற்ற கட்டடங்களைப் புனரமைத்து பொதுமக்களின் கோரிக்கையின்படி, அவ்விடத்தில் நியாய விலைக்கடை, அஞ்சல் அலுவலகம், நூலகம் ஆகியவை அமைப்பதற்கு வரைபடம் தயார் செய்துதர பொதுப்பணித்துறை கட்டடப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வுசெய்த பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறைகளைக் கேட்டறிந்தார்.ஆய்வுக்கு பின் பேசிய அவர், கரூர் ஒன்றியப்பகுதிகளில் உள்ள பயனற்ற கட்டடங்களைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.