எஸ்.வி.சேகர் மீதான வழக்கை நெல்லை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை!

நடிகர் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சனம் செய்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை நெல்லை நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

எஸ்.வி.சேகர் - நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாகத் தலைவர் அய்.கோபால்சாமி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு, தொடர்ந்து எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை. அதனால் கடந்த விசாரணையின்போது, அடுத்த முறை எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். 

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், `இந்த வழக்கில் எஸ்.வி.சேகர் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று உத்தரவு வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராவதற்கு 6 வாரம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

அந்த ஆணையின் நகலை தாக்கல் செய்யுமாறு நீதிபதி ராமதாஸ் கேட்டுக்கொண்டார். ஆனால், உத்தரவு இன்று வெளியாகியிருப்பதால் உடனடியாகத் தாக்கல் செய்ய முடியவில்லை என எஸ்.வி.சேகர் தரப்பு சொன்னதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராமதாஸ், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டு விசாரணையைத் தள்ளிவைத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!