`மீன்களில் பார்மலின் ரசாயனமா?’ அதிகாரிகளைக் கண்டித்து மீன் மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம்

தவறான தகவல்களைப் பரப்பியதாக மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து கும்பகோணத்தில் மீன் மார்க்கெட் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

பார்மலின்


தமிழகத்துக்கு ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக மீன்வளத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மீன்வளத்துறை அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மீன் மார்கெட் மற்றும் மீன் விற்பனையகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி சில தினங்களுக்கு முன் கும்பகோணத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதோடு அங்கிருந்த 500 கிலோ மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதனால் கும்பகோணம் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து, மீன்களை வாங்கச் செல்லாததால் கடந்த இரு நாள்களாக மீன் மார்க்கெட் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியும் தவறான தகவல்களைப் பரப்பிய மீன் வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் மீன் மார்க்கெட் வியாபாரிகள் இன்று மார்க்கெட் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கடையடைப்புப் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கும்பகோணம் தந்தை பெரியார் மீன்மார்க்கெட் வியாபாரிகளிடம் பேசினோம், ``கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்ததால் எங்களுடைய வியாபாரம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்மார்கெட்டை நம்பி 1,000 தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் பிழைத்து வருகின்றனர். கடந்த 2 நாள்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் சுமார் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதில்லை என அறிவிப்பதோடு அதை மக்களுக்குத் தெரிவித்து அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மீன்கள் வாங்க வருவார்கள், வியாபாரம் நடக்கும் எங்கள் வாழ்வு பிழைக்கும்’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!