வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:00:30 (13/07/2018)

ஈவ் டீசிங்கைத் தடுக்க ராமநாதபுரத்தில் தனிப்படை அமைப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவியரைக் கேலி செய்வோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஓம்பிரகாஷ் மீனா  தெரிவித்துள்ளார்.
 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கடந்த ஒரு சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவியரைக் கேலிசெய்வது தொடர்பாகப் புகார்கள் வந்தன. பரமக்குடியில்,  சில தினங்களுக்கு முன்பு  நான்கு  பெண்களைக் கேலிசெய்ததாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவே கோஷ்டிப்பூசலாகவும் மாறி, இரு தரப்பினர் மோதிக்கொண்ட செயலும் நடந்தது. எனவே பள்ளி, கல்லூரி மாணவியரைக் கேலி செய்வதைத் தடுப்பதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்ட காவல் சரகங்களிலும் தலா இரு படையினர் வீதம் மொத்தம் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 ஒவ்வொரு உட்கோட்டத்திலும் உள்ள தனிப்படையில், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு பெண் காவலர்கள் இருப்பார்கள். இவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பள்ளி, கல்லூரிகள் முன்பாக சாதாரண உடையில் இருந்து மாணவியரை யாரும் கேலி செய்கிறார்களா என்று கண்காணிப்பார்கள். தேவைப்பட்டால் சீருடையிலும் கண்காணிப்பார்கள். பள்ளிகள், கல்லூரிகள் துவங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவியரைக் கேலிசெய்வோர் பேருந்துகளில் சென்றால், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈவ்டீசிங் செயல்களில் ஈடுபடுவது குற்றம். இக்குற்றத்தை முதல் முறையாக ஒருவர் செய்து கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு மன்னிப்பு கொடுக்கப்படும். அது மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட நபரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அறிவுரை கூறுமாறும் அனுப்பிவைக்கப்படுவார்கள். அதேநபர் மீண்டும் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்குப்பதிவுசெய்து கைதுசெய்யப்படுவார்கள்.  இதேபோல, ஆசிரியர்கள் சிலரை செல்போனில் படம் எடுப்பது, கேலிசெய்வது பற்றித் தெரிந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

முன்னதாக, ஈவ்டீசிங்கைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கொடி அசைத்து தொடக்கிவைத்தார்.