குழந்தைகளுக்கு முட்புதர்கள் வேண்டாம்; தொட்டில்களில் சேருங்கள்! - கரூர் ஆட்சியர் வேண்டுகோள்

' பாதுகாக்க இயலாத குழந்தைகளைத் 'தொட்டில் குழந்தை' திட்டத்தில் சேர்க்கலாம்' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக அரசால் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்ட இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் தொட்டில் குழந்தை திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை ஒப்படைக்கலாம். குப்பைத்தொட்டி , முட்புதர்கள், சாக்கடைகள், பொது இடங்களில் வீசியெறியாமல், தொட்டில் குழந்தை திட்டத்தின் தொட்டிலில் சேர்க்கலாம். மேலும் ,கரூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , மாவட்ட சமூக நல அலுவலகம் , மாவட்ட ஆட்சியரகம் , மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு போன்றவற்றில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. 

மாவட்ட ஆட்சியர்

மேலும் , தத்தெடுத்தல் வழிகாட்டி நெறிமுறைகளின்படி தொட்டிலில் போடப்பட்ட குழந்தையை மீண்டும் திரும்பப் பெற 60 நாள்களுக்குள் உரிமை கோரலாம். அவ்வாறு உரிமை கோரப்படாதபட்சத்தில்,  தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோரிடம் குழந்தை அளிக்கப்படும். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர், நன்னடத்தை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,  எண்:13 , சாமி காம்ப்ளக்ஸ் , ஆர்.டி.ஓ ஆபீஸ் எதிரில், மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்) , கரூர் மாவட்டம். தொலைபேசி எண்:04324-257056 என்ற முகவரியில் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!