பாம்பன் கடல்மீது புதிய பாலம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடக்கம்! | Soil research works to set up new bridge over the Pamban Sea.

வெளியிடப்பட்ட நேரம்: 01:47 (13/07/2018)

கடைசி தொடர்பு:01:47 (13/07/2018)

பாம்பன் கடல்மீது புதிய பாலம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடக்கம்!

பாம்பன் கடலின்மீது அமைய உள்ள புதிய சாலைப் பாலம் தொடர்பான மண் ஆய்வுப் பணிகளில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.

பாம்பன்

பாம்பனில், கடல் பகுதியை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில், 100 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது, 'பாம்பன் ரயில் பாலம்'. தற்போதுள்ள இந்த ரயில்வே தூக்குப்பாலம், இந்திய ரயில்வே-க்கு பெருமைசேர்க்கும் பாரம்பர்யச் சின்னமாக இருந்துவருகிறது. இதன் அருகில் வாகனங்கள் சென்றுவரும்  வகையில், கடந்த 1988-ம் ஆண்டு அமைக்கப்பட்டது 'அன்னை இந்திரா காந்தி பாலம்'. 40 ஆண்டுகளைத் தொட இருக்கும் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மேலும், விடுமுறை நாள்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் இங்கு உருவாகிறது. இவற்றுக்குத் தீர்வு காணும் வகையிலும், பாம்பன் ரயில் பாலத்துக்கு மேலும் பெருமைசேர்க்கும் வகையிலும், பாம்பன் கடல் பகுதியில் மேலும் ஒரு தொங்கும் பாலம் அமைய உள்ளது.

வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், நடைபாதையோடுகூடிய இத்தொங்கு பாலம் அமைக்க ரூ.954 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. ஜெர்மனி நாட்டில் உள்ள கடல் பாலத்தைப் போன்று இந்தப் பாலம் அமைய உள்ளது. இந்தப் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஆய்வுக் குழுவினர், மண்டபம் தோணித்துறை கடற்கரைப் பகுதியில் பாலம் அமைய உள்ள இடத்தின் மண்ணின் தரம்குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுப் பணி முடிந்து, அதுகுறித்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பின், புதிய பாலம் அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது. இந்தப் புதிய  பாலம் அமைவதன்மூலம் ராமேஸ்வரத்துக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள்  போக்குவரத்து நெருக்கடியின்றிச் சென்று திரும்ப முடியும்.