வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது பயங்கரவாதமா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பேராசிரியர் ஜெயராமன் கேள்வி!

விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை அழித்து சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்துவருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘’மேற்கு மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகவே எட்டு வழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள்” என்று தெரிவித்திருந்தார். 

ஜெயராமன்

இந்நிலையில், வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது பயங்கரவாதமா என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய பேராசிரியர் ஜெயராமன், ``தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களும், வேதாந்தா, அதானி, அம்பானி போன்ற பெருநிறுவனங்களும் மேற்கு மாவட்டங்களில் களமிறங்கப்போகின்றன. சாலையின் இருபுறங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பறிமுதல்செய்யப்பட உள்ளன. தற்போது, எட்டு வழிச் சாலைக்கு நிலங்களைப் பறிகொடுப்பவர்கள் மட்டும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

எதிர்காலத்தில், தொழில்நிறுவனங்களுக்காக இப்பகுதிகளில் பறித்தெடுக்கப்பட இருக்கும் நிலங்களின் அளவு மிகப்பெரியதாக இருக்கும். எனவே, அனைத்துத் தரப்பினரும் இப்போதே எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் குரல்கொடுத்து, அறவழியில் போராட வேண்டும். எட்டு வழிச் சாலையை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மக்கள் தங்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் தற்காத்துக்கொள்ளப் போராடுவது பயங்கரவாதமா? மத்திய, மாநில அரசுகள், மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இது, ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!