தாமதமாகும் மருத்துவக் கல்லூரி..! தம்பிதுரையை நோக்கி கேள்வி எழுப்பும் மக்கள்

தம்பிதுரை 

கரூர் சணப்பிரட்டியில் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணியை இன்னும் எத்தனை வருடங்களுக்குதான் இழுத்தடிப்பீங்க' என்று கரூர் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

கரூர் சணப்பிரட்டியில் ரூ.268 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2013-ம் ஆண்டு அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியால் கொண்டுவரப்பட்டதுதான் இந்தத் திட்டம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் இந்தத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இந்தத் திட்டத்தோடு அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்து, தற்போது இயங்கி வருகின்றன. ஆனால், கரூரில் இன்னும் பணிகள் இழுத்தடிக்கப்படுகின்றன' என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். அதற்கு காரணம், 'யார் சொல்லும் இடத்தில் மருத்துவக்கல்லூரியை அமைப்பது?' என்று  தம்பிதுரைக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையிலான ஈகோ பிரச்னையால்தான் இவ்வளவு தாமதம்' என்று மக்கள் சொல்கிறார்கள்.

நம்மிடம் பேசிய கரூர்வாசிகள் சிலர், 'செந்தில்பாலாஜி இந்த மருத்துவக் கல்லூரியை வாங்கல் குப்புச்சிப்பாளையம் அருகே அமைக்க முயன்றார். ஆனால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் நகரத்தை ஒட்டியுள்ள சணப்பிரட்டியில் இடம் பார்த்தார். இதை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பு நீதிமன்றம் போய் தடை வாங்கியது. ஆனால், அதே நீதிமன்றம் மூலம் தடையை உடைத்து, தம்பிதுரை தரப்பு சணப்பிரட்டியிலேயே மருத்துவக் கல்லூரியை அமைத்து வருகிறது. உண்மையில் இரண்டு இடங்களும் போக்குவரத்துக்கு சரிப்படாத இடங்கள்தான். அவங்க சுயநலத்துக்காக ஒரு நல்லத் திட்டத்தை அவங்க இஷ்டப்பட்ட இடத்துல அமைக்குறாங்க. அதுவும், பல வருஷத்துக்கு கட்டுமானப் பணிகளை இழுக்குறாங்க. சீக்கிரம் முடிக்க தம்பிதுரை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமானப் பணிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது பேசிய தம்பிதுரை, 'கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக கடந்த 1.3.2018 அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 31.3.2019-க்குள் முடித்திட ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ரூ.60.23 கோடி மதிப்பில் 3.20 லட்சம் சதுரஅடி பரப்பில் வகுப்பறைக் கட்டடங்களும், ரூ.145.94 கோடி மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும், ரூ.61.83 கோடி மதிப்பில் 2.99 லட்சம் சதுரஅடி பரப்பில் மாணவ, மாணவியர்கள் தங்கும் விடுதிகளும் என ரூ.268 கோடி மதிப்பில் 11.78 லட்சம் சதுரஅடி பரப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி நகரின் மையப் பகுதியான காந்தி கிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்றார். ஆனால் மக்களோ, 'விரைவில் பணிகள் முடிவடையும்'ன்னு மாசத்துக்கு ஒருதடவை பேட்டி தர்றார். ஆனால், கட்டுமானப் பணிகள் சீக்கிரம் முடியுறதா தெரியலை" என்று புலம்புகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!