ராமேஸ்வரத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை..! அதிரடியாக பறிமுதல் செய்த காவல்துறை

 ராமேஸ்வரத்தில் மாறு வேடத்தில் சென்று சோதனை நடத்திய போலீஸார் கள்ளத்தனமாக விற்பதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரத்தில் மாறு வேடத்தில் சென்று சோதனை நடத்திய போலீஸார் கள்ளத்தனமாக விற்பதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

மதுபானம்

புனிதத் தலமாக உள்ள ராமேஸ்வரத்தில் இயங்கி வந்த மதுக்கடைகள் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூடப்பட்டன. தீவுப்பகுதியில் பாம்பனில் மட்டும் 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் உள்ளூர் மதுப் பிரியர்கள், வெளியூரில் இருந்து சுற்றுலா வரும் மதுபானப் பிரியர்கள் மது வாங்கி அருந்த முடியாமல் திண்டாடிப் போயினர். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பலர் பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களின் துணையுடன் கள்ளத்தனமாக மது விற்கும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் முழுவதும் தெருவுக்குத் தெரு கள்ளத்தனமாக மது விற்போரின் எண்ணிக்கை பெருகியது. இது குறித்து போலீஸாரும் கண்டு கொள்ளாததால் மதுக் கடை இல்லாத ராமேஸ்வரத்தில் கடை இருந்த காலத்தைவிட கூடுதலான அளவுக்கு மது விற்பனை நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல்துறையினருக்கு புகார் சென்றது.

இதையடுத்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் மாறு வேடத்தில் ராமேஸ்வரத்தில் என்.எஸ்.கே.வீதி, வேர்க்கோடு, நடுத்தெரு, சந்தனமாரியம்மன் கோயில் பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, முருகன் உள்ளிட்ட 8 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்புடைய 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக சிக்கியது. இவற்றைப் பறிமுதல் செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மதுவிற்பனையில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தார். மேலும் இதுபோன்று கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் முக்கிய வியாபாரியான ரவி என்பவரை தேடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!