உபரி நீர் கடலில் கலப்பதை நிறுத்த வேண்டும்..! ஈஸ்வரன் கோரிக்கை

அணை

மேட்டூர் மற்றும் பவானிசாகர் ஆகிய அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரானது வீணாகக் கடலில் கலக்காமல், மக்களுடைய பயன்பாட்டுக்காக தேக்கி வைக்க தமிழக அரசு என்ன முயற்சிகளை எடுத்திருக்கிறது? என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கர்நாடகாவில் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பி காவிரியில் 50,000 கன அடிக்கு மேலான நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால் இன்னும் சில நாள்களுக்குள் மேட்டூர் அணை நிரம்பப் போகிறது. அதேபோல, தமிழகத்தில் நீலகிரியில் பெய்துவரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையும் ஓரிரு நாள்களில் நிரம்பப்போகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பி வழியும்போது திறந்துவிடப்படும் உபரிநீரானது கடலில் கலக்காமல் தேக்குவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது. வருடாவருடம் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றும் அளவுக்கு தமிழகத்துக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் கிடைக்கும் தண்ணீரை, கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை வறட்சிக் காலங்களில் பூர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும், இதுபோன்ற காலங்களில்தான் அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கும் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். 

அணை

அத்திக்கடவு - அவினாசி  திட்டம் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மூலம் குளம் குட்டங்களை நிரப்பி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திருக்க முடியும். மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியவுடன் திறக்கப்படும் தண்ணீரும் வீணாகக் கடலில்தான் கலக்கப் போக்கிறது. கிடப்பில் போடப்பட்ட திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டங்கள் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் நிரப்பி நிலத்தடி நீரை செறிவூட்டியிருக்க முடியும். 

காவிரி தண்ணீரை கர்நாடக அரசு நினைத்தாலும் தடுக்க முடியாது என்ற நிலையில்தான் நாளுக்கு நாள் வெளியேற்றப்படும் உபரிநீரை கர்நாடக அரசு அதிகப்படுத்தி வருகிறது. வறட்சிக் காலங்களில் தண்ணீருக்காக தமிழக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கிறோம். ஆனால், அதிகமாக தண்ணீர் கிடைக்கும் சமயங்களில் அதை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள அத்திக்கடவு - அவினாசி, திருமணி முத்தாறு மற்றும் மேட்டூர் உபரிநீர் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் தமிழக அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. தண்ணீருக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மற்றும் பொதுமக்களும் தமிழக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வீணாக கடலில் கலந்தால் இனி போராட்டம் நடத்த முன்வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!