வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:07:50 (13/07/2018)

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்: வைகோ மீது கொலை முயற்சி வழக்கு!

வைகோ

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2009-ல் என்.டி.பி.எல் அனல் மின்நிலையத்துக்கு அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்தபோது, வைகோ தலைமையிலான ம.தி.மு.க-வினர் கறுப்புக் கொடி காட்டினர். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு கடந்த 6-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வைகோ ஆஜராக வந்தபோது அவருடன் ஏராளமான ம.தி.மு.க தொண்டர்களும் வந்தனர். அப்போது, அங்கிருந்த சில வழக்கறிஞர்கள் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் திட்டத் தொடங்கினர். 

விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தபோதும் அந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர். அப்போது, ம.தி.மு.க தொண்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த களேபரத்தில் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ், வெற்றி ஆகிய இருவர் மீதும் சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான புகாரின்பேரில் வைகோ உட்பட ஆறு பேர் மீது தற்போது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.