வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (13/07/2018)

கடைசி தொடர்பு:09:31 (13/07/2018)

நஷ்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்.. நல்ல பேருந்துவசதி கனவாகிவிடுமா?

அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் பல்வேறு வகைகளில் வாங்கப்பட்ட கடனுக்காக செலுத்தப்படும் வட்டி மட்டுமே, 2015-16 ஆண்டில் ரூ.616.5 கோடியாகவும் அடுத்த ஆண்டில் ரூ.773.25 கோடியாகவும் இருந்துள்ளது. 

நஷ்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்.. நல்ல பேருந்துவசதி கனவாகிவிடுமா?

அரசுப் பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ச்சியாக இழப்பில் ஓடிக்கொண்டிருக்கும்நிலையில், அவற்றின் கதி என்ன ஆகுமோ எனும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. 

சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் 6 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பது நிதித்துறையின் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் 8 போக்குவரத்துக் கழகங்களும் சேர்ந்து 9,372.17 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது அதிகம். 2015-16 நிதியாண்டில் 8,880 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. 

வருமானத்துக்கு ஏற்பவே செலவும் அதிகமாகவே இருந்துவருகிறது. வட்டி, தேய்மானம் நீங்கலாக 2015-16 நிதியாண்டில் 10,620 கோடி ரூபாயும் அதற்கு அடுத்த ஆண்டில் 11,377.9 கோடி ரூபாயும் செலவு ஏற்பட்டுள்ளது. எல்லாம் போக, நிகர இழப்பு என்பதைக் கணக்கில்கொள்வோமானால், 2014-15 நிதியாண்டில் 2,337.1 கோடி ரூபாயும் 2015-16 நிதியாண்டில் 2,602.5 கோடி ரூபாயும் அதைத் தொடர்ந்த ஆண்டில் 3,032.7 கோடி ரூபாயுமாகப் பதிவாகியுள்ளது. இந்த இழப்பைப் பொதுவான ஒதுக்கீடுகள் மூலமாகவோ மற்ற ஒதுக்கீடுகள் மூலமாகவோ குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், குறிப்பிட்ட மூன்று நிதியாண்டுகளிலும் அப்படியான ஒதுக்கீடு எதுவும் இல்லை. முந்தைய ஆண்டு சரிக்கட்டல்களின்படி கடைசியான இழப்பீடானது அதே மூன்று ஆண்டுகளிலும் முறையே ரூ.2,520.34 கோடி, ரூ.2,600 கோடி, ரூ.3,049.4 கோடி என தணிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. 

நஷ்டத்துக்கான பல காரணங்களில் முக்கியமாக இருப்பது வட்டியாகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் பல்வேறு வகைகளில் வாங்கப்பட்ட கடனுக்காக செலுத்தப்படும் வட்டி மட்டுமே, 2015-16 ஆண்டில் ரூ.616.5 கோடியாகவும் அடுத்த ஆண்டில் ரூ.773.25 கோடியாகவும் இருந்துள்ளது. 

நிர்வாகரீதியில் செய்யப்படும் பல செலவுகள் தவிர்க்கப்படக்கூடியவையாக இருந்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் உரிய கவனமின்மையாலும் அந்தச் செலவுகள் தொடர்கின்றன எனக் குற்றம்சாட்டுகிறார்கள், தொழிற்சங்கங்களின் தரப்பில். 

அரசுப் பேருந்து

அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநிலத் தலைவர் லட்சுமணனிடம் இது பற்றிப் பேசினோம். 

” மின்சாரவாரியத்தின் இழப்பு ரூ.5,786.39 கோடி; போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு 3,049.5 கோடி ரூபாய். மின்வாரியத்தின் இழப்பைச் சமாளிக்க அரசு முயற்சிகளைப் போல, போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைப்பதற்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கியாக வேண்டும். நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. கடைசியாகக் கிடைத்த விவரப்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.519 கோடி, விரைவுப் போக்குவரத்துக் கழகம் ரூ.177 கோடி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மதுரை ரூ.345 கோடி, சேலம் ரூ.304 கோடி, நெல்லை ரூ.367 கோடி, விழுப்புரம் ரூ.464 கோடி, கும்பகோணம் ரூ.476 கோடி, கோவை ரூ.423 கோடி இழப்பு என்று புள்ளிவிவரம் சொல்கிறார்கள்.

கடந்த வாரம் முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், டீசல் விலையேற்றத்துக்கு ஏதாவது வழி காண்பார்கள் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, டீசல் விலையேறும்போதெல்லாம் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அதை மானியமாக வழங்கும் என அறிவித்தார். 800 கோடி ரூபாயும் ஒதுக்கினார். அப்போது லிட்டருக்கு ரூ.43 ரூபாயாக இருந்த டீசலின் விலை இப்போது ஏறத்தாழ இரண்டு மடங்கு ஆகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க அரசு ஜெயலலிதாவின் உறுதிமொழியைக் காப்பாற்றவில்லை.

இடையில் அறிவியல்பூர்வமில்லாத வகையில் கட்டணத்தை உயர்த்தியதில், தனியாருக்குதான் லாபம் ஏற்பட்டது. ஓட்டை வண்டிகளை வைத்துக்கொண்டு தனியார் பேருந்துகளுடன் போட்டிபோடமுடியாதநிலையில், மேலும் மேலும் தனியார் பேருந்தை மக்கள் நாடும்நிலையை உண்டாக்கிவிட்டார்கள். இதிலேயே 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி பலவற்றையும் பட்டியலிடமுடியும். மொத்தத்தில் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியைக் குறைப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். ஆட்சியாளர்கள் மனதுவைத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்டு, மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியைத் தரமுடியும்” எனப் பொரிந்துதள்ளுகிறார் தொழிற்சங்கத் தலைவர் லட்சுமணன். 


டிரெண்டிங் @ விகடன்