20 ஆண்டு பகை... 20 கொலைகள்... மதுரையில் தொடரும் பழிக்குப்பழி சம்பவங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது நாகமணி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டம்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வேப்பங்குளத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்குச் சென்ற மதுரை பராசக்தி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் நாகமணி நேற்று கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீழ் மதுரைப்பகுதியில் தி.மு.க-வைச் சேர்ந்த வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும் இடையே கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் பகையால் இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ராஜபாண்டி தரப்பினரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு செய்தபோது வெடித்து வி.கே.குருசாமியின் ஆட்கள் இருவர் பலியானார்கள். இந்த நிலையில்தான் நாகமணியின் கொலை நடந்துள்ளது. இவர் குருசாமியின் ஆள் என்று கூறப்படுகிறது.

இக்கொலை தொடர்பாக கோவிலாங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளிகளில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைகாரர்கள், குருசாமி கோஷ்டியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவரைத்தான் கொலை செய்ய வந்திருக்கிறார்கள். பூவலிங்கம் தப்பித்துவிட, அவருடன் இருந்தார் என்பதற்காக நாகமணியைக் கொலை செய்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் மதுரையில் வி.கே.குருசாமி, ராஜபாண்டி கோஷ்டிகளில் இருந்துகொண்டு பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஒட்டு மொத்தமாக கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது மதுரையில் தொடர்ந்து வரும் வி.கே.குருசாமி - ராஜபாண்டி கோஷ்டிகளின் பழிக்குப்பழி கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!