வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (13/07/2018)

கடைசி தொடர்பு:12:10 (13/07/2018)

`அஞ்சு வருஷமா ஆசிரியரே இல்லை'- வேதனையில் அரசுப் பள்ளி மாணவர்கள்

கடவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி

``கரூர் மாவட்டம், கடவூரில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொருளியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால், எங்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகியுள்ள சூழல் உண்டாகியுள்ளது" என்று மாணவர்கள் வேதனைப்படுகிறார்கள்.

இது குறித்து மாணவர்களிடம் பேசினோம். ``கரூர் மாவட்டத்தில் கடவூர் பகுதி என்பது மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள். அதனால், 'தங்கள் கஷ்டம் தங்களோடு போகட்டும். பிள்ளைகளாவது நல்லா படிச்சு பெரிய நிலைமைக்கு வரட்டும்'ன்னு எங்களைப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறாங்க. ஆனால், கடவூர் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளும் சரியில்லை. போதிய ஆசிரியர்களும் இல்லை. இந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பில் 63 மாணவர்களும்,12-ம் வகுப்பில் 76 மாணவர்களும் படிக்கிறோம். பொருளியல் பாடத்துக்கு, அஞ்சு வருஷமா ஆசிரியரே இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஒருவரை நியமிச்சாங்க.

கடந்த ஆண்டு இங்கே பணியாற்றிய தலைமையாசிரியரின் முயற்சியால் அரசு ஆசிரியரை நியமிச்சாங்க. ஆனா அவரும் இப்போது இடமாறுதல்ல போயிட்டார். அதனால், பொருளியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்க இப்போ உள்ள தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. முன்னமாறி பாடமும் ஈஸியா இல்லை. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டம் எல்லாம் புதுசா இருக்கு. 12-ம் வகுப்புக்கு என்ன படிக்கிறதுன்னே தெரியலை. தலைமையாசிரியர் கண்டுக்கமாட்டேங்குகிறார். அதனால், ஆசிரியர்கள் இல்லாமல் பாடம் படிப்பதால், அந்த இரண்டு பாடங்களிலும் நாங்கள் தேர்ச்சிப்பெறாமல் போய்விடுவோமோன்னு பயமா இருக்கு. அதனால், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இதில் தலையிட்டு இரண்டு பாடங்களுக்கும் உரிய ஆசிரியர்களை நியமிக்கணும். இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்" என்றார்கள் ஆக்ரோஷமாக!