நிர்மலா தேவி வழக்கில் 1,160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

 பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 1,160 பக்கமுள்ள குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.

நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த வழக்கில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து துணைப்பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை ஆளுநர் மாளிகையிலுள்ள முக்கியப் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பல புகார்கள் எழுந்தன. அதனால், இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. ஆளுநரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிட்டியை அமைத்தார்.

விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த வழக்கு விசாரணையில் பலபேர் விசாரிக்கப்பட்டாலும், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமியோடு கைது நடவடிக்கை நின்றுவிட்டது. இந்த நிலையில், குரல் சோதனைக்கும் சென்னை தடயவியல் அலுவலகத்துக்கு  உயர் நீதிமன்ற உத்தரவுபடி சென்று வந்துவிட்டார் நிர்மலா தேவி. ஏழுமுறை ஜாமீன் மனுத்தாக்கல் செய்தும் அது தள்ளுபடியாகிவிட்டது.

இதனிடையே, நிர்மலா தேவியின் வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், நிர்மலா தேவி வழக்கில் 1,160 பக்கத்துக்கும் அதிகமுள்ள குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்பது வெளிவராத நிலையில், நீதிமன்ற விசாரணை இனி  வேகமாக நடைபெறும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!