வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:11:50 (13/07/2018)

குரங்கணி தீவிபத்து விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு!

குரங்கணி காட்டுத்தீவிபத்து தொடர்பான  விசாரணை அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வருவாய்த்துறைச் செயலாளர் அதுல் மிஸ்ரா சமர்ப்பித்தார்.

குரங்கணி தீ விபத்து

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக 36 பேர் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ காரணமாக 9 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வருவாய்த்துறைச் செயலாளர் அதுல் மிஸ்ரா தலைமையில் கடந்த மார்ச் 13-ம் தேதி ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இதையடுத்து வருவாய்த் துறைச் செயலாளர் அதுல் மிஸ்ரா, குரங்கணி வனப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார். அதேபோல எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இந்நிலையில், குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை அதுல்மிஸ்ரா இன்று முதல்வர் எடப்பாடியிடம் சமர்ப்பித்தார்.