`கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்த ஆட்டைத் திருடிய மர்மக்கும்பல்!

 கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த டைசன்

நடிகர் கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்த `டைசன்` என்ற செம்மறி ஆட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை வளசரவாக்கம், அன்பு நகரைச் சேர்ந்தவர் வீரசமர். இவர், 'கொம்பன்', 'மருது', 'கடைக்குட்டி சிங்கம்' உட்பட படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வளர்த்து வந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வீரசமர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

கலை இயக்குநர் வீரசமர் கூறுகையில், ``சினிமாத் துறையில் கலை இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். `மருது' படம் சூட்டிங்போது ராஜபாளையம் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்றேன். அப்போது, கொல்லப்பட்டறையில் கறுப்பு நிற செம்மறி ஆடு மூன்று மாதக்குட்டி (கிடா) கட்டப்பட்டு இருந்தது. அதைப்பார்த்ததும் வளர்க்க வேண்டும் என்று ஆசையில் கொல்லப்பட்டறையில் இருந்தவர்களிடம் கேட்டேன். 4,500 ரூபாய் கொடுத்து அந்த ஆட்டை வீட்டுக்கு வாங்கி வந்தேன். `டைசன்' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்தேன். வீட்டில் ஒருவரைப்போல எங்களுடன் பழகினான் `டைசன்'. எங்கள் பகுதியில் டைசனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். செல்ஃபி கூட பலர் எடுத்துள்ளனர். மாணவர்கள், மாணவிகள் ஆசையாக கொடுக்கும் உணவை `டைசன்' விரும்பி சாப்பிடும். 

நடிகர் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் `டைசன்' நடித்துள்ளது. நடிகர் கார்த்தி சார், டைசனை தடவிக் கொடுக்கும் காட்சி படத்தில் உள்ளது. சூட்டிங்கிற்காக குற்றாலம், காரைக்குடி ஆகிய இடங்களுக்கு டைசனை அழைத்துச் சென்றுள்ளேன். சம்பவத்தன்று (9-ம் தேதி) பால் வண்டியில் வந்த கும்பல் டைசனைத் திருடிவிட்டுச் சென்றுள்ளனர். அந்தக்காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதை போலீஸாரும் ஆய்வு செய்துள்ளனர். 

டைசன் திருட்டுப் போன தகவலைக் கேட்டதும் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நட்புக்காகத்தான் டைசனை நடிக்க வைத்தேன். படம் வெளியான இன்று `டைசன்' திருட்டுப் போனது எனக்கு கடும் மனவேதனையாக இருக்கிறது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை மாநகர் முழுவதும் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளேன். விரைவில் `டைசன்` கிடைப்பான் என்று நம்புகிறேன். டைசனை அவ்வளவு எளிதாக யாரும் தூக்கிக் கொண்டுச் செல்ல முடியாது. அறிமுகம் இல்லாதவர்களை அது முட்டித் தள்ளிவிடும். மயக்க மருந்து கொடுத்துதான் அதை திருடியிருக்க வேண்டும்" என்றார் வேதனையுடன்.

இந்த வீடியோவைக் காண....

 

 

 போலீஸார் கூறுகையில் ``சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பால் வண்டி அங்கு நிற்கிறது. பிறகு அந்த வண்டி செல்கிறது. அதன்பிறகுதான் ஆடு மாயமாகியுள்ளது. இதனால் அந்த பால் வண்டி குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!