வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (13/07/2018)

கடைசி தொடர்பு:19:39 (13/07/2018)

`மாணவி உயிரிழந்ததற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' - பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்!

கோவையில் மாணவி ஒருவர் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது உயிரிழந்ததற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கோவை மாணவி

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இரண்டாம் தளத்திலிருந்து கீழே வலைகட்டி குதித்தபோது பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஷ்வரி என்பவர், எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அந்த மாணவி குதிக்க மறுத்தும், பயிற்சியாளர் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டதால் மாணவி உயிரிழந்துள்ளார் என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

தேசிய பேரிடர் மேலாண்மைஇந்த வீடியோ வைரலாகிய நிலையில், பயிற்சியாளராக இருந்த ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது. அதில் `எதிர்பாராத விதமாக மாணவி உயிரிழந்துள்ளார். நாம் ஒரு இளம் உயிரை இழந்துள்ளோம். மாணவியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தச் சம்பவத்துக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கும் தொடர்பில்லை. அந்தக் கல்லூரியில் பயிற்சி அளித்த பயிற்சியாளர் தேசிய மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவரல்ல' என்று விளக்கமளித்துள்ளது.