வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:14:50 (13/07/2018)

`இந்த அறிக்கை தேவையில்லை; புதிய அறிக்கை தாக்கல் செய்யுங்கள்'- சிலைக் கடத்தல் விவகாரத்தில் நீதிபதி காட்டம்

சிலைக் கடத்தல் விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுவதாக தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிலைகள் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அதில் பாதுகாப்பு அறைகள் அமைக்க 2021-ம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கையை வாசித்த பின் நீதிபதிகள், `சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும் அவகாசம் கேட்பதுதான் அரசின் வேலையா? சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் மெத்தனம் தொடர்ந்தால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேடும். மேலும், சிலைகளுக்கான அறைகள் அமைக்க 2021 வரை கால அவகாசம் அளிக்க முடியாது. 100 சதுர  அடி கொண்ட பாதுகாப்பு அறையை அமைக்க 2021 வரை கால அவகாசம் தேவையா? அதுவரை காலதாமதம் செய்தால் அனைத்து சிலைகளும் திருடப்படும். காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும், அறநிலையத்துறை தாக்கல் செய்த அறிக்கையை நிராகரித்த நீதிபதிகள் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராகச் சொல்லி விளக்கம் கேட்பதே தீர்வாக இருக்கும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், அறநிலையத்துறைச் செயலாளர் உள்ளபோது தலைமைச் செயலாளரை அழைப்பது சரியாக இருக்காது என தெரிவித்தார்.  இதனால் காட்டமான நீதிபதி மகாதேவன், `நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாவிடில், தலைமைச் செயலாளரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கும் அதிகராம் உள்ளது' என்று ஆவேசமாக தெரிவித்தார்.