வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (13/07/2018)

கடைசி தொடர்பு:15:11 (13/07/2018)

சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு பள்ளி வகுப்பிலிருந்தே தயாராக வேண்டுமா? #FAQ

சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு பள்ளி வகுப்பிலிருந்தே தயாராக வேண்டுமா? #FAQ

போட்டித்தேர்வு எழுதுபவர்களின் மனதில் எண்ணற்றக் கேள்விகள் நிறைந்திருக்கும். அவற்றுக்குப் பதிலளிக்க, துறைசார் நிபுணர்களுடன் திருச்சியில் (14.07.2018) அன்று இலவசப் பயிற்சி முகாமை நடத்துகிறது விகடன் பிரசுரம்.

போட்டித்தேர்வு

இந்த முகாமில், பற்பல போட்டித்தேர்வு நூல்கள் எழுதியவரும், பல இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்கியவருமான டாக்டர் சங்கர சரவணனிடமும், தனது பயிற்சி மையத்தின் மூலம் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்கிவரும் சங்கர் தேவராஜனிடம், `போட்டித்தேர்வு எழுதுபவர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?' என்பது குறித்துக் கேட்டோம். 

டாக்டர் சங்கர சரவணன், ``தற்போது போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், நல்ல அறிவுத்திறனோடுதான் களம் இறங்குகிறார்கள். அவர்கள் சில நுண்ணிய விஷயங்களைக் கவனித்தால் மட்டும் போதும். வெற்றி எளிதில் கைவசமாகும்" என்றார். இவரிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கான பதிலைக் கேட்டோம். 

போட்டித்தேர்வு சங்கர சரவணன்``தமிழில் தேர்வு எழுத உதவும் வகையில் நூல்கள் உள்ளனவா?"  

``1984-ம் ஆண்டிலேயே பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தமிழில் தேர்வு எழுதி வெற்றிபெற்றிருக்கிறார். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், 1970-80ம் ஆண்டுகளில் 1,000 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகங்களை எல்லாம் தற்போது மறுஅச்சு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கலாம். தமிழில் மட்டுமே எல்லா விஷயங்களையும் படிப்பேன் என அடம்பிடிக்காமல், கொஞ்சம் ஆங்கிலத்திலும் படிக்க வேண்டும்.

போட்டித்தேர்வுக்கான விஷயங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அவற்றைப் படித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும். முதன்மைத் தேர்வை ஆங்கிலத்தில்தான் எழுதியாக வேண்டும் என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்."

 ``சிவில் சர்வீஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு இரண்டுக்கும் சேர்ந்து படிக்கலாமா?" 

``இது, மாணவர்களின் பொருளாதார நிலை மற்றும் அடிப்படை அறிவைப் பொறுத்தது. நேரடியாக யூ.பி.எஸ்.சி-யில் வெற்றிபெற முடியும் என்றால், சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம். இளம்வயதிலேயே தேர்ச்சிபெற்று பதவி பெறலாம். வீட்டின் பொருளாதார நிலை குறைவாக இருந்து, கொஞ்சம் அதிகம் படிக்க வேண்டுமென்றால், டி.என்.பி.எஸ்.சி தேர்வின் ஒவ்வொரு படியாகத் தேர்ச்சிபெற்று உயர் பொறுப்புகளையும் பெறலாம். இதற்குக் கொஞ்சம் காலம்பிடிக்கும்".  

``வேலைசெய்துகொண்டே படிக்கலாமா?"  

``படிக்கலாம். இதற்கு, விடுமுறை நாள்களை சரியான முறையில் பயன்படுத்தியும், பயிற்சிக்கு தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியும் படிக்க வேண்டும். வார இறுதிநாளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சி மையங்கள் இருக்கும் பெரிய நகரங்களில் வேலைசெய்தால் உற்சாகத்துடன் படிக்கலாம்".  

``முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் படித்தால் பயன் தருமா?"  

``முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் படிப்பதன்மூலம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் தேர்வுக்குத் தயாராகலாம். உதாரணமாக, நடப்பு விஷயங்கள்குறித்த கேள்விகளை எப்படிக் கேட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் செய்தித்தாள்களை வாசிக்கலாம்".  

``படிப்பதற்கு எவ்வளவு செலவாகும்?"  

``எந்த வகையில் படிக்க இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே  இதைக் கணக்கிட முடியும். கிராமப் பகுதியில் இருப்பவர்கள்,  அங்கு இருந்தே படிக்கலாம். இணைய வசதி இருந்தால் போதுமானது. சிலர் பயிற்சி மையத்துக்குச் சென்று படிப்பதற்கு அதிகம் விரும்புகிறார்கள். இன்னும் சிலர் டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்குச் சென்று படிக்கிறார்கள். சென்னையில் ஒரு மாணவர் தங்கிப் படித்தால் மாதம் 5,000 ரூபாய் செலவாகும். மேலும், பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு 20,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் செலுத்தவேண்டியிருக்கும்."

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவன இயக்குநர் சங்கர் தேவராஜனிடன் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகள் குறித்துக் கேட்டோம். 

போட்டித்தேர்வு சங்கர் தேவராஜன்``போட்டித்தேர்வுகளுக்கு எப்போது முதல் படிக்க ஆரம்பிக்கலாம்?" 

``பள்ளியில் படிக்கும்போதே செய்தித்தாள்களைத் தொடர்ந்து படித்துவருவதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படிக்கும்போது, இரண்டாம் ஆண்டிலிருந்து போட்டித்தேர்வுக்குத் தயாரானால் வெற்றிபெறுவது எளிது."

``பள்ளிப்படிப்பை முடித்து என்ன டிகிரி படிப்பில் சேரலாம்?" 

``போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எந்த டிகிரி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு பேக்அப்பாக இருக்க வேண்டும். ஒரு வேலை இல்லாவிட்டால் இன்னொரு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்."

``போட்டித்தேர்வுகளுக்கு கோச்சிங் பயிற்சி அவசியமா?" 

``ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ், வங்கி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரி பணி, ரிசர்வ் வங்கியில் அதிகாரிப் பணி எனப் பல்வேறு அரசுப் பணிகளுக்கு 1,50,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏராளமான அரசு வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆகையால், முறையாகப் பயிற்சி பெற்றால் வீண்போகாது."

``முக்கிய நகரங்களில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டும் போட்டித்தேர்வில் வெற்றி கிடைக்குமா?" 

``எங்கிருந்தும், எந்தக் கல்வி நிறுவனத்திலிருந்து படித்தாலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். படிக்கும்போது அடிப்படை அறிவையும் நுண்ணறிவையும் மேம்படுத்திக்கொண்டாலே போட்டித்தேர்வில்  எளிதாக வெற்றி பெறலாம்."

``வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் படிக்கலாமா?" 

``வீட்டிலிருந்தே படிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வெவ்வேறு வேலைகளில் ஈடுபடாமல், தேர்வை மட்டுமே குறிக்கோளாகக்கொள்வது அவசியம். ஆன்லைனில் ஏராளமான பயிற்சி வாய்ப்புகள் உள்ளன" என்றார். 

இதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு விளக்கம்பெற்று, யூ.பி.எஸ்.சி / டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கான இலவசப் பயிற்சி முகாம், விகடன் பிரசுரம் சார்பில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வரும் சனிக்கிழமை (14-07-2018) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள, அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு அவசியம்.

கீழ்க்காணும் இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ளலாம். https://goo.gl/forms/2OW5cofguEXNKSQN2 மேலும் 044-6680 8019 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தும், 80560 46940, 73959 99467, 97899 77822 என்ற எண்ணில் அழைத்தும் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியும் முன்பதிவு செய்யலாம்.