வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (13/07/2018)

கடைசி தொடர்பு:15:10 (13/07/2018)

படகு ஓனர்களை ஆஜராகச் சொல்லி தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்து செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும், படகின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள்

கடந்த 5-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களையும், 8-ம் தேதி மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். இவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்தனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் மூன்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று இந்திய மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் நீரியல் வளத் துறை அதிகாரிகள் சார்பில் யாழ்ப்பாண அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ``இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி வெளிநாட்டு வள்ளங்களில் தொழிலில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையில் தொழிலில் ஈடுபட்டனர்'' என இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  இந்த வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி ஜூட்சன், ``16 குற்றவாளிக்களுக்கும் இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதே குற்றச்செயலை 16 பேரும் மீண்டும் செய்கின்றபோது, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 16 குற்றவாளிகளையும் உடனடியாக நாடு கடத்த குடிவரவு குடியகல்வு துறையினருக்கு உத்தரவிடப்படுகிறது"  என தீர்ப்பளித்தார்.


மேலும், புதிய சட்டத்தின் கீழ் படகுகளுக்கு அபராதம் விதிப்பதா? அல்லது அரசுடமையாக்குவதா? என்ற உத்தரவு ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் என்றும், இம்மாதம் 28-ம் தேதி  படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இந்திய மீனவர்கள் சார்பில் இலங்கை வழக்கறிஞர் ஜோய் மகிழ் மகாதேவா ஆஜரானார். இலங்கை அரசு கொண்டு வந்த புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு உரிய அழுத்தம் கொடுக்காததால் புதிய சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிடித்துச் செல்லப்பட்ட படகுகளுக்கும் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பர்யமாக மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்களுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.