வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (13/07/2018)

கடைசி தொடர்பு:15:30 (13/07/2018)

கல்விச் செலவை அரசே ஏற்றது! துப்புரவுத் தொழிலாளியின் மகனைக் கௌரவித்த கலெக்டர்!

நெல்லை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றுபவரின் மகனுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது. அந்த மாணவனை மாவட்ட ஆட்சியர் அழைத்து கௌரவித்தார். 

துப்புரவுத் தொழிலாளி மகனுக்கு பாராட்டு

நெல்லை பழையபேட்டை அருகே சமூகரெங்கையன்கட்டளையைச் சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அவர் மனைவி சிவசக்தி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மூத்த மகன் முத்து பி.ஏ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் சுதாகர் தமிழ் வழியில் கல்வி கற்ற நிலையிலும் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதி 303 மதிப்பெண் எடுத்தார்.

அவருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை கிடைத்துள்ளது. அவர் முதலாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணமான 10,500 கட்டியபோதிலும், உடைகள், புத்தகங்கள், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு சிரமத்துக்கு உள்ளாகி இருந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர்சதீஷ், அந்த மாணவனை நேரில் வரவழைத்தார். 

தனது அறைக்கு வந்த அந்த மாணவனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். மாணவனின் குடும்ப பின்னணி குறித்தும் கல்விக்கான தேவைகள் பற்றியும் கனிவுடன் விசாரித்தார். பின்னர், அந்த மாணவனின் பெற்றோரிடம், `மருத்துவ மாணவன் சுதாகரின் மருத்துவப் படிப்புக்கான செலவை தமிழக அரசே ஏற்கும்’ என அறிவித்தார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், `இந்த மாணவனுக்கான கல்விச் செலவை அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. தற்போது தமிழக அரசு கல்வி உதவிக்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்தி நெல்லை மாவட்ட மாணவர்கள் கல்வியில் சிறப்பான இலக்கை எட்ட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். 

குவியும் பாராட்டு

துப்புரவுத் தொழிலாளியின் மகனின் கல்விச் செலவை அரசே ஏற்பதற்கான நடவடிக்கை மேற்கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அவருக்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் ஏராளமானோர் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும் கலெக்டரின் நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.