வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/07/2018)

கடைசி தொடர்பு:15:50 (13/07/2018)

`நான் சொன்னது குத்தமா, மீம்ஸ்செல்லாம் போடாதீங்க' - செல்லூர் ராஜு வருத்தம்

செல்லூர் ராஜூ

``மதுரை சிட்னி மாநகராக மாறும் எனத் தெரிவித்தது ஒரு குற்றமா, அதுக்கெல்லாமா மீம்ஸ் போடுவீங்க'' என்று மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு நகைக்சுவையாகக் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.

மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ``வரும் 15-ம் தேதி காமராஜர் பிறந்நாளை முன்னிட்டு மதுரையில் அ.தி.மு.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாகப் பாலங்கள், அரசு அலுவலகங்கள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜைகள் நடைபெற உள்ளன. இவற்றாஇ, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் தொடங்கிவைக்க உள்ளனர். மதுரை வளர்ந்த நகரமாக மாற மதுரையில் தேவையான பல்வேறு இடங்களில் பாலம் வர உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி அழகுபடுத்த உள்ளோம். கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் வரவுள்ளன. வைகை ஆற்றங்கரையில் இரு புறமும் மரங்கள், பூச்செடிகள் கொண்டு அழகுபடுத்தப்பட உள்ளன. 

மேலும், வைகையில் கழிவுநீர் கலக்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மதுரையின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.1,650 கோடி செலவில் திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. பா.ஜ.க-வோடு கூட்டணி என்று எல்லாம் சொல்ல முடியாது. அதெல்லாம் தேர்தல் சமயத்தில்தான் முடிவு செய்யப்படும். பா.ஜ.க-வோடு இணக்கமாக இருப்பதால்தான் அதிக திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திவருகிறது. தேர்தல்களுக்குத் தயாராக இருக்கிறோம். வார்டு வாரியாகச் செயல் வீரர் கூட்டம் நடத்தி வருகிறோம். எப்போது தேர்தல் வைத்தாலும் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார். நான் ஒரு சாதாரண மனிதன்தான். அமைச்சர் என்றெல்லாம் எனக்கு பந்தா காட்டத் தெரியாது" என்று தெரிவித்தார்.

முன்னதாக மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, ``மதுரை சிட்னி மாநகராக மாறும் எனத் தெரிவித்தது ஒரு குற்றமா, அதுக்கெல்லாமா மீம்ஸ் போடுவீங்க" என்று மீம்ஸ் கிரியேட்டர்ஸை நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பி சிரித்தார்.