நவராத்திரி விழாவில் 11 வகையான அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சிதரும் வாராஹி அம்மன்

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்குமம் அலங்காரம் எனத்  தினமும் ஒரு  பொருளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா

தஞ்சாவூர் பெரியகோயில் வளாகத்தின் உள்ளே  அமைந்துள்ளது மகா வாராஹி அம்மன். மிகவும் பிரசித்திபெற்ற வாராஹியை வணங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமனவர்கள் வந்துசெல்வார்கள். சிறப்பு வாய்ந்த வாராஹி அம்மனுக்கு  ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான 16-ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

இதற்காக, காலையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றன. அதன்பிறகு, வாராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபராதனை காட்டப்பட்டது. பின்னர்,  மாலைக்கு மேல் வாராஹிக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் வழிபட்டனர். விழா நாள்களில் தினமும் காலையில் யாகம் வளர்ப்பதோடு,  மாலையில் குங்கும அலங்காரம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், பழவகைகள், காய்கறிகள் என தினமும் ஒரு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அத்துடன் மாலை நேரங்களில் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும். 22-ம் தேதி,வாராஹிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!