`வி.வி.ஐ.பி-களுடன் டேட்டிங், சாட்டிங்!' - நடிகைகளை வளைத்த 'ரிலேஷன்ஷிப்' கும்பல்

 சாட்டிங் செய்ய அழைப்பு விடுத்தவர்கள்

'சென்னையில் உள்ள குடும்பப் பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள், சீரியல், சினிமா நடிகைகள் ஆகியோருடன் டேட்டிங், சாட்டிங் செய்யலாம்' எனக் கூறி வலைவிரித்த இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

'பிரிவோம் சந்திப்போம்', ' ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஜெயலட்சுமி. தற்போது சீரியலில் நடித்துவருகிறார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில், ' வி.வி.ஐ.பி-களுடன் டேட்டிங், சாட்டிங் செய்து 30,000 ரூபாய் முதல் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மெசேஜை ஜெயலட்சுமி டெலிட் செய்துவிட்டார்.  கடந்த வாரத்தில், மீண்டும் அதே மெசேஜ் வந்தது. ஆனால், வேறொரு எண்ணில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. இதுகுறித்து தன்னுடைய நலன் விரும்பிகளிடம் ஆலோசனை நடத்தினார். அவர்களுடைய ஆலோசனையின்பேரில், வழக்கறிஞர்கள் துணையோடு களமிறங்கினார்.  அதன்பிறகு நடந்தவற்றை நம்மிடம் விவரித்தார். 

  நடிகை ஜெயலட்சுமி

``வாட்ஸ்அப் மெசேஜ் தொடர்பாக, கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து புகார் கொடுத்தேன். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார் கமிஷனர். அதன் அடிப்படையில், எனக்கு மெசேஜ் அனுப்பியவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்குத் திட்டமிட்டோம். சென்னை அண்ணா நகரில் உள்ள இடத்துக்கு அந்த நபரை வரும்படிக் கூறினோம். ஆனால் அவர் வரவில்லை. அடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள காபி ஷாப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். ரூபாய் ஒரு லட்சத்துடன் வருமாறு கூறியிருந்தோம். நாங்கள் சொன்ன நேரத்தில், நடிகை ஒருவருடன் இரண்டு நபர்கள் உள்ளே வந்தனர். அவர்களிடம் வழக்கறிஞர் ஒருவர்மூலம் பேச்சுவார்த்தை நடத்த வைத்தோம். பணம் கொடுக்கும்போது நடிகை உள்பட மூன்று பேரையும் போலீஸார் மடக்கிப்பிடித்துவிட்டனர்" என்றார். 

இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம்.``காபி ஷாப்புக்கு வந்த நடிகைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிக்க வாய்ப்பு கேட்டு வந்ததாகக் கூறியதால் அவரை விட்டுவிட்டோம். மற்ற இருவரையும் கைதுசெய்துள்ளோம். அதில் ஒருவர் கவியரசன், மற்றவர் முருகப்பெருமாள். இவர்கள் இருவரும் இணைந்து ரிலேசன்ஷிப் சர்வீஸ் என்ற பெயரில் இந்தத் தொழிலைச் செய்துவந்துள்ளனர். அவர்களிடம் 56 நடிகைகளின் போட்டோக்கள், செல் நம்பர்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு ரேட் என நிர்ணயித்துள்ளனர். காபி ஷாப்புக்கு அழைத்து வந்த நடிகைக்கு 1,50,000 ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர். 

ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் சார்லஸ் கூறும்போது,`` எங்கள்மீது அந்தக் கும்பலுக்கு நம்பிக்கை வரும் வரை செயல்பட்டோம். அந்த நபர்கள் வைத்திருந்த செல்போனில், ஏராளமான நடிகைகள், குடும்பப் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் உள்ளன. அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!