பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த விவகாரம் - 2 தனிப்படைகள் அமைப்பு!

பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாணவி லோகேஸ்வரி

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த லோகேஸ்வரி (19) என்ற மாணவி இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலை கட்டிக் குதித்து, பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, முதல் மாடியில் திடீரெனத் தவறிவிழுந்து, லோகேஸ்வரிக்குத் தலையில் பலத்த அடி ஏற்படவே, சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், பயிற்சியாளர் லோகேஸ்வரியைத் தள்ளிவிட்டதே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. இது விமர்சனத்தை எழுப்பவே, பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், `மாணவிக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர் தேசிய மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவரல்ல' என விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், தற்போது மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாணவி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!