ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத முருகன் சிலை திருட்டு! - மர்ம நபர்கள் கைவரிசை

சோழவரத்தில், 100 வருட பழைமையான கோயிலில் மரகத முருகன் சிலை திருடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒருகோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

மரகத முருகன் சிலை திருட்டு

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ளது எடப்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் 100 வருட பழைமையான முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மூலஸ்தானத்தில் 50 வருடங்களுக்கு முன்பு மரகதத்தால் ஆன முருகன் சிலை இரண்டு அடி உயரமும் 4 கிலோ எடையுள்ள சிலை வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 7 மணியளவில் கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பொதுமக்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர். ஊர் மக்கள் ஒன்றுகூடி கோயிலில் சென்று பார்த்தபோது பிராகாரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதத்தால் ஆன முருகன் சிலை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்கள் சோழவரம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தி கொள்ளை நடந்த கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். கோயில் கைரேகைப் பதிவுகளைப் போலீஸார் சேகரித்து வருகின்றனர். கோயிலிலிருந்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க பொன்னேரி டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கோயில் சிலைகள் திருடுபோவது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஆர்.கே.பேட்டை அருகே ஐம்பொன் சிலைகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!