8 ஆண்டுகளாக அரசுப் பள்ளி அறையில் கிடக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள்!

தொலைக்காட்சிப் பெட்டிகள்

திருப்பூர் அரசுப் பள்ளி வகுப்பறைகளில், கடந்த 8 ஆண்டுகளாக பூட்டிவைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளால், தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

திருப்பூரில் இயங்கிவருகிறது பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கு, சுமார் 3000-க்கும் அதிகமான மாணவிகள்  பயின்றுவருகிறார்கள். இப்பள்ளிக்கு, கடந்த 2010-ம் ஆண்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 30 அறைகளைக்கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இந்தக் கட்டடத்தை பள்ளிப் பயன்பாட்டுக்காக திறப்பதற்கு முன்னர், அன்றைய தி.மு.க அரசின்மூலம் செயல்படுத்தப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சியை இப்பள்ளி வளாகத்தில் வைத்து மாவட்ட நிர்வாகம் நடத்தியது. அதற்காக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தொலைக்காட்சிப் பெட்டிகளை இந்தக் கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளில் வைத்து விநியோகம் செய்துவந்தனர்.

இந்நிலையில், அன்றைய அரசின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதையடுத்து, விநியோகிக்கப்படாத பல தொலைக்காட்சிப் பெட்டிகளை  இப்பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள ஆறு வகுப்பறைகளில் அடுக்கிவைத்து அதிகாரிகள் பூட்டி வைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்தக் கட்டடமும் பள்ளிப் பயன்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்ட நிலையில், தரைத்தளத்தில் உள்ள அந்த ஆறு வகுப்பறைகளில் இருந்து மட்டும் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இன்றளவும் எடுத்துச்செல்லாமல் உள்ளனர். 

அரசுப் பள்ளி

இதனால், கடந்த 8 ஆண்டுகளாக அந்த வகுப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை நீடித்துவருகிறது. இதனால், இப்பள்ளியில் வகுப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவிகளைக் கட்டட வராண்டா பகுதிகளில் அமர வைத்துப் பாடம் நடத்தவேண்டிய சூழலும் நிலவுகிறது. அதிலும், பூட்டிவைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் தரைத்தளத்தில் உள்ளதால், இப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிகள் மேல்தளத்தில் உள்ள வகுப்பறைகளுக்குச் செல்ல மிகவும் சிரமப்படவேண்டியதாய் உள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டிகள்

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவேண்டிய தொலைக்காட்சிப் பெட்டிகளை, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரே காரணத்துக்காகவே அவற்றை இன்றுவரை வெறுமனே கிடப்பில் போட்டுவைத்திருப்பது மாணவிகளின் பெற்றோர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!