தலைசுற்றவைக்கும் சொகுசுப் பேருந்துக் கட்டணம்... அதிர்ச்சியில் பயணிகள்!

நெல்லையில் இருந்து சென்னைக்கு, இன்று முதல் சொகுசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துக்கான கட்டணம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1,365 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துக் கட்டணத்தை விட இது அதிகம் என்பதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சொகுசுப் பேருந்து

தமிழக பேருந்துப் பயணிகளின் நலன் கருதி, மாநிலம் முழுவதும் குளிரூட்டப்பட்ட படுக்கை வசதியுடன்கூடிய புதிய சொகுசுப் பேருந்துகளை இயக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி,  கடந்த 3-ம் தேதி சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேருந்துகளைத் தொடங்கிவைத்தார். நெல்லை மாவட்டத்துக்கு இரண்டு சொகுசுப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நெல்லையிலிருந்து ஒரு பேருந்தும், மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து ஒரு பேருந்தும் இயக்கப்பட இருக்கின்றன. 

இந்தப் பேருந்தை, நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இன்று கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் இந்தப் பேருந்து, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை கோயம்பேடு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பேருந்து, 30 படுக்கைகள்கொண்டது. இதில் சிறப்பு வசதியாக, பேருந்து ஒட்டுநர், அடுத்துவரும் பேருந்து நிறுத்தத்தை பயணிகளுக்கு மைக் மூலம் அறிவிக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. பயணிகளுக்கு அவசரகால பெல் வசதி இருக்கிறது. பேருந்துக்கு முன்னேயும் பின்னேயும் வரும் வாகனங்களைத் துல்லியமாக அறிந்துகொள்ள, சென்சார் கருவிகள், ஜி.பி.எஸ் கருவி  ஆகியவை இருக்கின்றன. பயணிக்கும் நபர்களுக்கு, தலா ஒரு போர்வை, கம்பிளி வழங்கப்படும். பேருந்தில் எளிதாக ஏறும் வகையில், சாய்தள வசதி செய்யப்பட்டுள்ளது. 

புதிய பேருந்து

ஆனாலும், இந்தப் பேருந்தில் நெல்லை-சென்னை கட்டணமாக ரூ.1,365 நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நெல்லையிலிருந்து சென்னை வரையிலான 662 கி.மீ தூரத்துக்கு மொத்தம் 17 நிறுத்தங்கள் உள்ளன. தனியார் பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 900 ரூபாயாக இருக்கும் நிலையில், இந்தப் பேருந்துக்கான கட்டணம் மிகவும் அதிகம் என்கிறார்கள் பயணிகள். 

அத்துடன், தனியார் பேருந்துகள் 7 மணி முதல் 9 மணி நேரத்தில் செல்லும் நிலையில், கூடுதல் கட்டணம் கொடுத்துச் செல்லவேண்டிய அரசு சொகுசுப் பேருந்து 10 மணி நேரத்தில் செல்லும் என்பதுவும் பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.  இதனால், சாமான்ய மக்கள் பயணிக்கும் வகையில் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக இருக்கிறது.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!