வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (13/07/2018)

மாணவி உயிரிழப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம்! - அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

அமைச்சர் உதயகுமார்

"கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம்'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில், தொடர்ச்சியாக குடிமராமத்துப் பணிகளின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று திட்டங்களைத் தொடங்கிவைத்துவருகின்றனர். மேலூரை அடுத்த பூஞ்சுத்தியில், 27 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணியை இன்று அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் அவர், "நீர்நிலைகளைக் குடிமராமத்து செய்ய முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 328 கோடியில் 1500-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றுவருகின்றன. அதில் 27 லட்சம் மதிப்பீட்டில் மேலூர் பூஞ்சுத்தி கண்மாய் தூர் வாரும் பணி தொடங்கியுள்ளது.

கோவையில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் இருந்த மாணவி, எதிர்பாராத விதமாக  உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற பயிற்சிகளைத்  திறமையான பயிற்சியாளர்கள் மட்டுமே பயிற்சி வழங்க வேண்டும். ஆனால், பயிற்சியாளர் தனியார் பயிற்சியில் பயின்றுள்ளார். இதுகுறித்து முதல்கட்ட விசாரணையை அடுத்து, எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது . இதில், கல்லூரி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணம் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என  தெரிவித்தார்.