வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (13/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (13/07/2018)

மாமியார், மருமகள் சண்டையால் நடந்த விபரீதம்! - தாயைக் கொன்று வீட்டில் புதைத்த மகன்

மாமியார் - மருமகள் சண்டையால் தாயைக் கொன்று மகன் வீட்டில் புதைத்த சம்பவம் மயிலாடுதுறை அருகே நடந்துள்ளது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வாளவராயன்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் கலியமூர்த்தி - பூசம் தம்பதியோடு, கலியமூர்த்தியின் 80 வயதான தாயார் உய்யம்மாளும் சேர்ந்து வாழ்ந்து வந்தார். உய்யம்மாளுக்கு வயதாகிவிட்டதால், அவரை மருமகள் பூசம் உதாசீனப்படுத்துவதுடன் அடிக்கடி சண்டையிட்டு உணவு கொடுக்காமலும் தவிக்க வைத்துள்ளார். மனைவியுடன் சேர்ந்து விவசாயக் கூலியான கலியமூர்த்தியும் தன் தாயைத் திட்டி தீர்ப்பாராம்.

தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்!

இந்நிலையில், முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த உய்யம்மாளைக் கடந்த 2 மாதங்களாகக் காணவில்லை என்பதால், `உன் தாய் எங்கே' என்று ஊர்க்காரர்கள் கேட்டிருக்கிறார்கள். வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்குப் போயிருப்பதாகக் கூறி கலியமூர்த்தி சமாளித்திருக்கிறார். கலியமூர்த்தி சொன்ன உறவினர் வீட்டுக்குப் போய் ஊர்க்காரர்கள் விசாரித்தபோது உய்யம்மாள் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் சந்தேகமடைந்த கிராம நாட்டாமை சுப்பையன், ஊர் பிரமுகர்களுடன் சேர்ந்து கலியமூர்த்தியைக் கடுமையாக விசாரித்தபோது, தன் தாயைக் கொன்று வீட்டுக் கொல்லையில் புதைத்துவிட்டதாக அதிர்ச்சியான செய்தியைச் சொல்லியிருக்கிறார். 

கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரனிடம் கலியமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், 'என் தாய்க்கு வயதாகிவிட்டதால் அவரைப் பராமரிக்க முடியவில்லை. இதற்கிடையே அடிக்கடி மாமியார், மருமகள் சண்டை வருவதும் நான் சமாதானம் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.  இதனால், என் தாய் எனக்கு சுமையாக இருந்தாள். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மாமியார், மருமகள் சண்டை நடந்தது. அப்போது கோபத்தில் எங்க அம்மாவைப் பிடித்து வேகமாகக் கீழே தள்ளினேன். தலையில் அடிபட்டு அந்தக் கணமே இறந்துவிட்டார். வெளியில் தெரிந்தால் கொலை வழக்கில் சிக்க நேரிடுமே எனப் பயந்து வளர்ப்பு ஆடு ஒன்றைக் கொன்று அதைக் கொல்லைப் புறத்தில் புதைப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் சொன்னேன். அதன்பின் குழிதோண்டி ஆட்டையும் என் தாயாரின் உடலையும் சேர்த்துப் போட்டு புதைத்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

இந்தக் கொலையில் கலியமூர்த்தியின் மனைவி பூசத்துக்கும் தொடர்பு உள்ளதால் பெரம்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.