வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/07/2018)

ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியில் முறைகேடு! அதிகாரிகள்மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உற்சவர் சிலையில் தங்கம் கலக்காமல் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 8 பேர்மீது வழக்கு பதியப்பட்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணைசெய்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

டில்லிபாபுஇந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோயிலில் சிதிலம் அடைந்துள்ள இரட்டை திருமாளிகையின் கட்டுமானப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த சிவபக்தரான அண்ணாமலை என்பவரின் மகன் டில்லிபாபு என்பவர் இந்து அறநிலைத்துறைக்கு புகார் அனுப்பினார். ஆனால், அந்தப் புகாரின்மீது இந்து அறநிலைத்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, இந்து அறநிலையத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடர்ந்த பாபுவிடம் பேசினோம். “கட்டுமானப் பணியின்போது அகற்றப்பட்ட பழைய தூண்கள் எங்கு இருக்கின்றது எனத் தெரியவில்லை. அதுபோல் திருப்பணி என்ற பெயரில் கல்வெட்டுகள் அடங்கிய கற்களை அதிகாரிகள் துணையுடன் வெளியில் விற்று விட்டிருக்கிறார்கள். ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கோயிலை சீரமைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. இவற்றை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும்’’ என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க