வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (13/07/2018)

கடைசி தொடர்பு:16:37 (13/07/2018)

`இனி அமைதியாக இருக்க வேண்டாம்' - நடிகைகளுக்கு  ஜெயலட்சுமி அறைகூவல் 

நடிகை ஜெயலட்சுமி

``தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டாம்'' என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த மெசேஜ் குறித்த புகாரின் பேரில் கவியரசன், முருகப்பெருமாள் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.  நடிகைகளுக்கு ஏற்படும் சிரமங்கள்குறித்து நடிகை ஜெயலட்சுமி மனம்விட்டு நம்மிடம் பேசினார்.

``கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு  வந்த மெசேஜ் என்னை மிகவும் மனவருத்தமடையவைத்தது. அந்த வாட்ஸ்அப் மெசேஜில், `வி.வி.ஐ.பி-க்களுடன் டேட்டிங், சாட்டிங் செய்தால் 30,000 ரூபாய் முதல் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என்று குறிப்பிட்டிருந்தது. `உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இந்த மெசேஜை டெலிட் செய்துவிடுங்கள்' என்றும் கூறப்பட்டிருந்தது. இவ்வளவு தைரியமாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு  எந்தவித பயமும் இல்லை. நான் கொடுத்த புகாரின்பேரில் எனக்குத் தவறான மெசேஜ் அனுப்பியவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.

இதற்கென ஒரு குரூப் இருக்கிறது. இவர்கள்தான் தவறான இமேஜை நடிகைகளுக்கு ஏற்படுத்துகிறார்கள்.  எங்களுக்கும் கௌரவமான வாழ்க்கை தேவை. நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது. நடிப்பு என்பது எங்களுடைய தொழில் மட்டும்தான். சாதாரண மக்களைப் போல  போராட்டமும் இருக்கிறது. போலீஸாரிடம் சிக்கியவர்களிடம் ஏராளமான நடிகைகள், பெண்களின் போட்டோக்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், அந்த நபர்களின் முகம்கூட எங்களுக்குத் தெரியாது. 

என்னுடைய ஃப்ரெண்டு ஒரு மெசேஜ் ஷேர் பண்ணியிருந்தார். அவருக்கும் இதுபோன்ற மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. எல்லா நடிகைகளையும் ஒரே மாதிரியாக சிலர் பார்க்கின்றனர். எனவே நடிகைகளே... இந்தப் பிரச்னைகளுக்கு இனி அமைதியாக இருக்காதீர்கள், பொறுமையாக இருக்காதீர்கள், காலம் மாறிவிட்டது.  மனசுக்குள் அழுது கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். நமக்கு உதவிசெய்ய போலீஸ், நண்பர்கள் இருக்கிறார்கள். நடிப்பு என்பது நமக்குத் தொழில் என்பதை சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துவோம்.  எல்லா நடிகர்கள், நடிகைகள் சொகுசாக வாழவில்லை. எனக்கு நடிப்பு மூலம் போதிய வருமானம் இல்லை என்பதால், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக உள்ளேன். அதோடு, ஜூனியர் அட்வகேட்டாகப் பணியாற்றுகிறேன். வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் போன்ற பொறுப்புகள் ஒவ்வொரு நடிகைகளுக்கும் இருக்கிறது" என்றார்.