`பணம்தான் குறிக்கோள்'- பயிற்சியாளர் ஆறுமுகம் பற்றி அதிர்ச்சித் தகவல்

கோவை தனியார் கல்லூரி மாணவி, பயிற்சியின்போது உயிரிழந்த விவகாரம் அடுத்தடுத்த விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது. 

கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்தது. அப்போது, இரண்டாவது மாடியிலிருந்து கீழே வலை கட்டிக் குதித்தபோது, லோகேஸ்வரி (19) என்ற மாணவி எதிர்பாராத விதமாக முதல்மாடியில் சன் சேடில் தவறி விழ, அவருக்கு பலத்த அடி ஏற்பட்டது. அதனால், மாணவி லோகேஸ்வரி மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் இறப்பு, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் விமர்சனங்களையும் உண்டாக்கியுள்ளது. காரணம், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல், பயிற்சியாளர் லோகேஸ்வரியைத் தள்ளிவிட்டதே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. இதையடுத்து, மாணவி இறப்புக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. ஆனால், இதை மறுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம், `மாணவிக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர், தேசிய மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவரல்ல' என விளக்கமளித்தது. இதற்கிடையே, பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீஸார் கைதுசெய்தனர். 

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில், ``பயிற்சியாளர் ஆறுமுகம்தான் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டுள்ளார். அதனால்தான் கல்லூரி நிர்வாகம் அவரை நியமித்தது. ஆனால், பயிற்சிக்காக இவர் கொடுத்த முகவரிகள் மற்ற தொடர்புகள் அனைத்தும் போலியானவை. பணம் சம்பாதிப்பதற்காக அவர் இதைச் செய்துவந்துள்ளார். பல கல்லூரிகளில் சென்று இந்தப் பயிற்சியை அளித்துள்ளார். அதை, அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். இதே கருத்தைத்தான் கல்லூரி நிர்வாகம் தரப்பிலும் சொல்லப்பட்டுவருகிறது.

பயிற்சியாளர் ஆறுமுகம்

``பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிப்பதற்கு சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. அதாவது, பயிற்சி அளிப்பதற்கு முன் முறையாக உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல, ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற முன்னேற்பாடுகள் எதுவும் அங்கு செய்யவில்லை. இந்தக் காரணங்களால்தான் முதலுதவி கிடைக்கும் முன்னரே மாணவி உயிரிழந்தார். முறையான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், மாணவி லோகேஸ்வரி உயிர்பிழைத்திருக்க வாய்ப்புள்ளது'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!