`போராட்டத்துக்கு மத்தியில் கல்குவாரி தொடங்கினால் என்ன அர்த்தம்?’- பொதுமக்கள் ஆவேசம்

`கல்குவாரிக்கு எதிராகப் பலபோராட்டங்கள் நடத்துவது உங்களுக்குத் தெரியாதா கேள்வி எழுப்பிய பொது மக்கள், `மீண்டும் கிரஷர் மற்றும் கல்குவாரி தொடங்கினால் என்ன அர்த்தம்' என்று கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரி

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே அமைந்துள்ள திருவளக்குறிச்சி கிராமத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் உள்ளன. இந்நிலையில் திருவளக்குறிச்சி கிராமத்தில் பொது மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் கல்குவாரி ஏலம் விடப்பட்டு கல் உடைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாகக் கிரஷர் தொடங்கப்படவுள்ளது. இதையறிந்த திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிரஷர் தொடங்க உள்ள பகுதிக்குச் சென்று முற்றுகையிட்டனர். அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவர்களுக்கு சரிவர பதில் அளிக்காததால் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தாசில்தார் ஷாஜகான் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ``கல் குவாரியில் அதிகளவு பள்ளம் வெட்டி எடுப்பதால் சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது. விவசாயத்துக்கும் தண்ணீர் நீர்மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஏலம் விடப்பட்ட பட்டா குவாரியில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்துச் செல்கின்றனர். அதனால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைக் கேட்ட தாசில்தார் ஷாஜகான் கல்குவாரி பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!