வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (13/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (13/07/2018)

மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வருமா? - விவசாயிகள் கவலை!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே, கடைமடைப் பகுதி வரை பாசனத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் புதுமண்ணியாறு முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது.  இதனால், சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்வது சிரமம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளர்.  

சீர்காழி வட்டாரத்தில், கடலோரக் கிராமங்கள் வரை சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களுக்கு நேடியாகவும், 100-க்கும் மேற்பட்ட பாசனக் கிளை வாய்க்கால்கள் மூலமாகவும் பாசன வசதியை அளிப்பதில் முக்கியப் பங்குவகிப்பது புதுமண்ணியாறு.  கடந்த சில வருடங்களாக, காவிரியில் நீர் வரத்து வராததாலும், மழைப்பொழிவு தவறியதாலும், ஆறு நெடுகிலும் காட்டாமணக்குச் செடிகளும் சீமைக் கருவேல முள்மரங்களும் வளர்ந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. குறிப்பாக, கொள்ளிடம் அருகேயுள்ள கொப்பியம் கிராமத்தில், ஆறு முழுவதும் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு புதர்கள் காடாய் வளர்ந்து, ஆற்றுத் தண்ணீரைத் தடுக்கும் தடுப்பணைபோலவே காட்சியளிக்கிறது.  

புதுமண்ணியாறு

இதுபற்றி கொள்ளிடம் வட்டார விவசாய சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் விஸ்வநாதனிடம் பேசினோம், ``சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன், புதுமண்ணியாறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களைத் தூர் வார வேண்டியது மிகவும் அவசியம்.  இல்லையென்றால், பாசனத்துக்கு தண்ணீர் செல்வது தடைபடும். இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும், மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் தேங்கினால், அதன் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பொது மக்களைப் பெரிதும் பாதிக்கும் நிலை உண்டாகிவிடும். எனவே அரசு, இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனே புதுமண்ணியாற்றிலும் அதன் கிளை வாய்க்கால்களிலும் தூர் வார வேண்டும்’’ என்று முடித்தார்.