`ஒரு பொட்டலம் 100 ரூபாய்!’ - ஓ.பி.எஸ் ஊரில் கஞ்சா விற்பனை அமோகம்

தேனி மாவட்டம், பெரியகுளம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர். நீண்ட பாரம்பர்யம் கொண்ட பெரியகுளத்தில் தற்போது கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா உபயோகிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் விற்கப்படும் கஞ்சா பொட்டலம் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தென்கரை, கைலாசப்பட்டி, வடகரை போன்ற பகுதிகளில் விற்கப்படும் கஞ்சா, பொட்டலம் ஒன்றுக்கு 100 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. "பெரியகுளத்தின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா விற்பனை செய்வது ஒற்றை கும்பல்தான். அவர்கள் தென்கரையில் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் பெரியகுளத்தின் மற்ற பகுதிகளுக்குக் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. அவர்களைப் போலீஸார் கண்டுகொள்வதில்லை. காரணம், தென்கரை காவல்நிலையத்தை நன்கு கவனித்துவிடுவார்கள். இதனால், போலீஸார் துணையோடு கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்தக் கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்களும் இளைஞர்களும் அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பெரியகுளத்தில் சமீப காலமாக இளைஞர்களால் அதிகம் குற்றச் சம்பவங்கள் நடந்துவருகிறது. இதேநிலை தொடர்ந்தால் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுத்துவிடும். இங்கிருக்கும் போலீஸாரால் எந்தப் பலனும் இல்லை. எனவே, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கஞ்சா விற்பனை கும்பலை அழிக்க வேண்டும்" என்றார் பெயர் வெளியிட விரும்பாத பெரியகுளம் வாசி ஒருவர். நம்மிடம் தகவல் தெரிவித்துவிட்டு, 100 ரூபாயுடன் தென்கரை சென்று தாராளமாக விற்பனை செய்யப்படும் கஞ்சா பொட்டலத்தை வாங்கி நம்மிடம் நிரூபித்தார். பகலில் சர்வ சாதாரணமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!