வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/07/2018)

கடைசி தொடர்பு:20:20 (13/07/2018)

`கூட்டணி வைத்ததை எண்ணிப்பாருங்கள்’ - ராமதாஸுக்கு வானதி சீனிவாசன் நினைவூட்டல்

வானதி சீனிவாசன்

``பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தேர்தலில் யாரோடும் கூட்டணி இல்லை என்று பத்திரம் எழுதிக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு கூட்டணி அமைத்ததையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்’’ என்று மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

சேலத்தில் முள்ளுவாடி கேட் அருகே உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், சேலம் கோட்டப் பொறுப்பாளர் முருகேசன், இணைக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்துக்குப் பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், ``கடந்த வாரம் சென்னைக்கு தேசிய தலைவர் வந்த பிறகு, அவரின் வழிகாட்டல்படி களப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்காகப் பணிகளை ஆரம்பித்திருக்கிறோம். ஏற்கெனவே பாராளுமன்றப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் 3-ம் தேதியிலிருந்து 26 குழுக்களாகப் பிரிந்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு துணை நின்று கையெழுத்து இயக்கம், போராட்டம் நடத்தி தீர்வு காண்போம். இதற்காக பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இன்று சேலத்தில் 4 சட்டமன்றத் தொகுதியிலிருந்து பொறுப்பாளர்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் பிரச்னைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லை என்றும் ஏற்காடு பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில்லை என்றும் தலைவாசலில் விளைபொருள்கள் விற்பனை செய்ய உழவர் சந்தை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தில் பல கோடி நலத்திட்டம் செய்ய இருக்கிறது. ராணுவ உதிரிபாக தளவாட மையம், 10,000 கோடியில் பசுமைச் சாலை நிறைவேற்றியிருக்கிறது. பா.ம.க நிறுவரன் ராமதாஸ், இனி பா.ஜ.க-வோடு கூட்டணி இல்லை என்று கூறியிருக்கிறார். அது அவருடைய உரிமை. ஆனால், தேர்தலில் யாரோடும் கூட்டணி இல்லை என்று பத்திரம் எழுதிக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு கூட்டணி அமைத்ததையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பண மதிப்பு இழப்பின் தொடர்ச்சியே கிறிஸ்டி நிறுவன ரெய்டு நடைபெற்றுள்ளது. இதுவரை பண மதிப்பு இழப்பு செய்த பிறகு, 3 லட்சம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. அந்த அக்கவுண்ட் மூலம் போடப்பட்ட 25,000 கோடி கறுப்பு பணம் மீட்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினார்.