`போலி பயிற்சியாளர் பற்றி விசாரணை நடத்தப்படும்’ பேரிடர் மேலாண்மை ஆணையர் தகவல்!

முறையான அனுமதி இல்லாமல் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவையில் மாணவி இறப்புக்கு காரணமான போலி பயிற்சியாளர் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை ஆலோசனை

தமிழகம் முழுவதும் தற்போது குளம், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை ஆய்வு செய்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடக்கும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்வதற்கான சிறப்பு அதிகாரியாகப் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையாளர் ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு நெல்லை வந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி கோட்டம், சிற்றாறு கோட்டம் , கோரையாறு கோட்டம் ஆகியவற்றில் மொத்தம் உள்ள 1,315 குளங்கள் குறித்து விளக்கம் கேட்டார். அதில் தற்போது 144 குளங்களில் மராமத்துப் பணிகள் நடக்க இருப்பது பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர ரத்னு, ``நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, சிற்றாறு, கோரையாறு உள்ளிட்ட கோட்டங்களில் 144 குளங்களில் சுமார் ரூ.34.14 கோடி மதிப்பீட்டில் மராமத்துப் பணிகள் நடக்க உள்ளன. அவை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அந்தப் பணிகளைத் துரிதமாகவும் சிறப்பாகவும் நடத்துவது பற்றி விளக்கப்பட்டது. 

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிற்சியின்போது மாணவி பலியாகியுள்ளார். முறையான அனுமதி இல்லாமல் பேரிடர் கால தடுப்புப் பயிற்சி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் மாணவி இறப்புக்குக் காரணமானவர், போலி பயிற்சியாளர். அவருக்கும் பேரிடர் பயிற்சிக் குழுவுக்கும் எந்தத் தொடர்புமில்லை. கல்லூரிகளில் பயிற்சி அளிப்பதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

கோவையில் கல்லூரி மாணவி மரணத்துக்குக் காரணமான போலி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தச் சான்றிதழ்களை ஆய்வு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது’’ என்றார். முன்னதாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!