``டீ கடையை மூடு... விவசாயிகளுக்கு இங்க என்ன வேலை?” - பசுமைச் சாலைக்காகப் போலீஸ் கெடுபிடி!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் உள்ள மணல்மேடு என்ற கிராமத்தில் இன்று 8 வழி பசுமைச் சாலைக்காக நிலம் அளவிடும் பணி நடைபெற்றது. ஏ.டி.எஸ்.பி சந்திரசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டனர்.

பசுமைச் சாலை, காஞ்சிபுரம்

அப்பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் நேரு, செயலாளர் மோகன், நிர்வாகிகளான பாஸ்கரன், சங்கர் உள்ளிட்டோர் அங்கு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அதைப் பார்த்த ஏ.டி.எஸ்.பி `உங்களுக்கு இங்கே என்ன வேலை’ எனக் கேட்டார். ‘நாங்கள் சும்மாதான் நின்றுகொண்டிருக்கிறோம். போராட்டம் செய்யவில்லை’ எனச் சொன்னதும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார்கள். அங்கிருந்த விவசாயச் சங்க நிர்வாகிகளிடம் இருந்த செல்போன் பிடுங்கப்பட்டது. அங்கு நின்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரைக் குண்டுக்கட்டாகக் காவல்துறையின் வேனில் ஏற்றினார்கள். பின்பு, அவர்கள் மாகரல் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். டீக்கடை இருப்பதால் அங்கு டீ குடிப்பதற்காகச் சிலர் வருகிறார்கள் என்பதால் அங்கிருந்த டீ கடைகளையும் மூடச் சொல்லி காவல்துறையினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!